(அ. சி.) அகன்றார் வழிமுதல் - துறவிகள் பரம்பரைக்கு முதல்வன். சிவன்றாள் - சிவசத்தி. வரும் வழி - அச் சத்தி வரும் வழி நாம் அறியோம் - 'நாம்' என்னும் மமகாரத்தைக் கொண்டு இருக்கிறவரை அறியோம். (9) 1597. தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.1 (ப. இ.) உடம்பகத்துக் காணப்படும் வாயில்கள் இரண்டும் சாளரங்களாகிய ஏழும் கூடித் தொளைகள் ஒன்பது. அத் தொளைகள் ஒன்பதும் திறக்கப்பட்டன. ஆம்பற்பூச் சூடிய கூந்தலையுடைய திருவருளம்மை கஞ்சுகமாகிய சட்டைபோல் அவ் வுடம்பினைக் காப்பள். உயிர்ப்பு முறையால் வேம்பாகிய நடுநாடியின் வழிமேலேறி நோக்கினால், மீகாமனாகிய சிவபெருமான் கூரைக்கூம்பாகிய உச்சித்துளையில் திருக்கோவில் கொண்டருள்வன். அருளவே அருள் பூக்கின்ற முழுமுதற் சிவபெருமானின் விழுச்சுடர் வெளிப்படும். கூம்பு - பாய்மரம். (அ. சி.) தூம்பு - தொளை. ஆம்பல் குழலி - தேவி, சத்தி. கஞ்சுளி சட்டை வேம்பேறி - வீணாத்தண்டு ஏறி. மீகாமன் - சீவன். கூரையின் கூம்பு - முகட்டின் உச்சி. பூக்கின்ற - ஒளிவிடுகின்ற. (10)
5. தவம் 1598. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை2 இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. (ப. இ.) புலன்களை நிலைபெறவேண்டிய சிவபெருமான் திருவடியின்கண் ஒடுக்குவார் நன்மையே செய்வர். அதனால் அவர்கள் தலைசிறந்தவராவர். அவர்களுள்ளம் எஞ்ஞான்றும் நடுக்கம் உறாது. அவர்கள் தேனாரும் சிவவாழ்க்கை வாழ்வதால் அவர்கட்குப் பிறப்பு இறப்புத் துன்பம் எய்தா. அதனால் அவர்களுக்கு நமனும் இல்லை. வேறு எவ்வகை உலகியல் துன்பமும் இல்லை. சிவனின் நினைப்பு மறப்பாகிய பகல் இரவுகளில்லை. அடைதற்குரிய வழிப்பயன்களும் இல்லை. அவர்களே பற்றற்றான் பற்றினைப் பற்றி ஏனைப் பற்றுக்களை அறுத்தவராவர். (அ. சி.) ஒடுங்குநிலை - புலன்வழிச் செல்லா நிலை. (1)
1. செஞ்ஞாயிற்றுச். புறநானூறு. 30. 2. நாமார்க்குங், அப்பர், 6. 98 - 1. " வானைக். " 4. 93 - 4.
|