பகைவர்களை வென்று நீக்கி உயிரையும் உடையானையும் நான் அவன் என்று இரண்டாக வேறுபட எண்ணாமல், அவ் வெண்ணத்தை அவ்வாளினால் ஈர்த்து, உலகமாகிய விளைநிலத்தில் மெய், வாய், கண், மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளையும் புகஒட்டாமல், சிவனடிப்பேறாகிய வானோர்க்கும் உயர்ந்த மேனிலத்தில் போமாறு செலுத்தினால் நால்வகைத் தவத்தினும் முடிந்த தவமாகிய அறிவில் அறிவாகிய தவத்தால் பெறப்படும் சிவவொளியின்கண் தன்ஒளி அடங்கி ஆவியும் தன் ஒளியைக் கண்டு இன்புறும். அறிவுள் அறிவு - ஞானத்தில் ஞானம். (அ. சி.) மதிவாள் - அறிவாகிய வாள். இனத்திடை நீக்கி - காமம் முதலிய பகைவர் அறுவரினின்றும் விலக்கி. இரண்டற ஈர்த்து - தான், நான் (சிவன் - சீவன்) என்ற பாவனை ஒழிந்து சிவோகம் பாவனை செய்து. புன.....மறித்தால் - ஐம்பொறிகளும் புலன்களின் வழிச் செல்லாமல் தடுத்தால். தவ.....யாமே - தவத்தினால் பெறும் ஒளியாகிய சீவ ஒளியைப் பெறலாகும். (6) 1612. ஒத்து மிகவுநின் றானை யுரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ முத்தி கொடுக்கும் முனிவ னெனும்பதஞ் சத்தான செய்வது தான்தவந் தானே. (ப. இ.) சிவன் ஆருயிர்களுடன் வேறறக் கலந்து நின்று எஞ்ஞான்றும் இயங்கி அருள்கின்றனன். அவன் திருப்பெயராகிய 'சிவய நம' என்னும் திருவைந்தெழுத்தைப் பொருளுணரப் புகழ்ந்து ஓதுவதும், பத்தியினை முறுகுவிக்கும் மெய்யடியார்களைப் பணிந்து தொழுவதும் செய்யும் பெற்றியர்க்கும் வீடுபேற்றினை அளித்தருளும் சிவபெருமானாகிய முனிவரன் வெளிப்பட்டருள்வன். மேலும் தன் திருவடிப்பேறென்னும் சிவமெய்யினைத் தந்தருள்வன். அதுவே நற்றவத்தின் பயனாம். (அ. சி.) ஒத்து - சீவனோடு ஒத்து. உரைப்பது - துதிப்பது. முத்தி....தவந்தானே - முத்தியைப் பயக்கும் நன்மை தீமைகளை முனிந்த நிலையாகிய சிவத்தன்மையகை் கொடுப்பதும் தவமே. (7) 1613. இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன் தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந் தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.1 (ப. இ.) சிலர் புறப்பூசையினை அயன்மொழியால் ஆற்றுகின்றனர். அவர்கள் உடல், செயல் செய்தாலும் உள்ளம் மொழிப் பொருள் தெரியாமையால் அதன்கண் தங்குவதில்லை. அதனால் செய்யுங்கால் சிவனுக்கு எண்ணி இலையிட்டும் பூச்சாத்தியும் வழிபட்டுக் கொண்டு வந்தாலும் கண்களில் இன்பநீர் பெருகக் காண்கிலம். திருமறையும் திருமுறையும் ஆகிய செந்தமிழ் வேத ஆகமங்களைத் தலைசிறந்த மெய்ந்நூலாகக்கொண்டு திருவைந்தெழுத்தை மந்திரமாகவும் திருப்பாடல்களை வழிபாட்டிற் செய்யும் செய்திறன் விளக்கும் தந்திரமாகவும்
1. அந்தண். சம்பந்தர், 1. 28 - 11. " யாவர்க்கு. 10. திருமந்திரம், 109.
|