1715. சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடும் சத்தி அறுகோணஞ் சயனத்தை யுற்றிடுஞ் சத்திநல் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ் சத்தி யுருவாஞ் சதாசிவன் தானே.1 (ப. இ.) திருவருளாற்றல் நாற்கோணமாகிய மூலத்தினிடத்து நீர்போல் இடையறாது இயக்கிக்கொண்டிருக்கும். அத் திருவருளே கொப்பூழின்கண் மால்போல் கிடந்து உற்றுழி இயக்கும். இந்நிலை அறுகோணமாகும். அத் திருவருளே நெற்றிப் புருவநடுவில் வட்ட நிலையத்தில் நின்று ஆணை செலுத்திக் கொண்டிருக்கும் இக் குறிப்புத் தோன்றவே செந்தமிழான்றோர் தொன்றுதொட்டு நெற்றிப் புருவ நடுவில் வட்டமாகப் பொட்டு இடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். திருவருளாற்றலின் வடிவே சிவன் வடிவமாகும். சந்தனம், குங்குமம், சாந்து ஆகிய மூன்றாலிடும் பொட்டு முப்பண்பின் அடையாளமாகும். திருநீற்றுப் பொட்டுச் சிவனார் எண்குண அடையாளமாகும். (16) 1716. மானந்தி எத்தனை காலம் அழைக்கினுந் தானந்தி யஞ்சின் தனிச்சுட ராய்நிற்குங் கானந்தி யுந்தி கடந்து கமலத்தின் மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.2 (ப. இ.) பேரன்பும் பெருங்காதலும் பொருந்திய மெய்யடியார்கள் பலநாள் அழைப்பர். அதற்கிணங்கி எழுந்தருளும் சிவபெருமானின் அன்பு, அறிவு, ஆற்றல், வனப்பு, நடப்பு ஆகிய திருவருளாற்றல் ஐந்தும் ஒப்பில்லாத் தனி முழுமுதல் ஆற்றலாகும். அவை பெருஞ்சுடராகப் பொலியும். அத் திருச்சுடர் நடுவாய் அதற்கு உயிராய்ச் சிவன் பிரிப்பின்றி நின்றருள்வன். கால்நந்தி உயிர்ப்பினை உந்திச்சென்று உச்சியின்மேல் ஆயிரம் இதழ்த் தாமரையில் அமர்ந்து வேண்டும் திருவுருக்கொள்வன். அத் திருவுரு ஒன்பது வகைப்படும். அவை வருமாறு: அறிவு, ஆற்றல், ஒலி, ஒளி ஆகிய நான்கும் அருவமாகும். அருளோன் ஆகிய சதாசிவன் அருவுருவமாகும். ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் நான்கும் உருவமாகும். இவற்றை முறையே சிவம், சத்தி, சதாசிவன், ஈசன், உருத்திரன், மால், அயன் எனலுமாம். இத் திருவுருவங்களைப் பொருந்தி நின்று உலகினை இயைந்து இயக்கி அருளுகின்றனன். (அ. சி.) மானந்தி - ஆசை மிகுந்து. அஞ்சில் - சத்தி உருவமாகிய பஞ்ச முகங்களில். கானந்தி - பிராணவாயு. உந்தி - மேலே செலுத்தி. கமலத்தின்மேல் - உச்சித் தாமரை; சகசிர அறை. ஒன்பதின் மேவி - ஒன்பது வடிவங்களில் பொருந்தி. (17) 1717. ஒன்றிய வாறும் உடலி னுடன்கிடந்து என்றுமெம் மீச னடக்கும் இயல்பது தென்றலைக் கேறத் திருந்து சிவனடி நின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.
1. உருவருள். சிவஞானசித்தியார், 1. 2 - 27. " ஆளான. அப்பர். 6. 67 - 1. 2. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|