685
 

7. சிவ லிங்கம்
(சிவகுரு)

1742. குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

(ப. இ.) ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இவ் வுலகமும், நீரும், தீயும், காற்றும் (வெளியும்) வரிசையாக விளங்கும் விளக்கம் சிவனாலேயாம். இவை எல்லாமாய்ச் செறிந்த சிவனை நாம் ஒரு குறியின்வைத்து வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுவதும் அவன்றன் திருவருட்டுணையாலேயாம். இவ் வுண்மை அறியகில்லேனே. குறி - வரைத்து.

(அ. சி.) வரைத்து - எல்லைப்படுத்தி.

(1)

1743. வரைத்து வலஞ்செய்யு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மல ரேந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யோனே.

(ப. இ.) அச் சிவபெருமானை ஒரு குறியின்கண் வைத்து வழிபடும் வகை ஒன்று உண்டு. அது திருவைந்தெழுத்தால் ஆம். செம்பொற் குடத்து நிரைத்து வைத்த தெண்ணீரும், மருமலரும் அங்கையில் ஏந்திப் புகழ்ந்து மொழியப்படும் 'நந்திநாமம் நமச்சிவாய' என்னும் செந்தமிழ்த் திருமறை ஓதித் திருவடியிலிட்டு வழிபடுதல் என்பதேயாம். இங்ஙனம் வழிபட்டு உணர்வின்கண் உணரவல்லார்க்குப் புரிசடையோனாகிய சிவபெருமான் விட்டு நீங்கி எங்கும் போகான்.

(அ. சி.) இப் பாட்டு மஞ்சன நீராட்டி, மலரான் அருச்சித்து சிவநாமங்களை உச்சரித்து, அவன் திருவடியை உள்ளன்போடு உணர்ந்து உருக வேண்டுமென்று கூறிற்று.

(2)

1744. ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நானவ னைத்தொழ
வென்றைம் 1புலனு மிகக்கிடந் 2தின்புற
அன்றென் றருள்செய்யும் ஆதிப் பிரானே.

(ப. இ.) எம் முதல்வனாகிய சிவபெருமான் ஒருவனே உலகுக்கு முழுமுதல் என அருளால் உணர்ந்தேம். அவனை நன்னெறி நான்மையும்


1. அன்றாலின். அப்பர், 6. 50 - 3.

" மன்றுளே. 12. திருநீலகண்டர், 42.

2. இந்திரிய. சிவஞானசித்தியார், 10. 2 - 1.