இம் மூவரும் ஆசான் மெய்க்கண் உறைவோர். தலையளி: தண்ணளி; பெருங்கருணை. இவ்வகை (1776) ஒன்பது திருமேனிகளுடன் இயைந்து இயக்கினும் சிவபெருமான் ஒன்றும் இயைந்திடா இயல்பினனாகி யப்பாலுள்ளவனாவன். (அ. சி.) தலையான நான்கு - சிவம், சத்தி நாதம், விந்து. கீழ் நான்கு-ஈசன், அரன், மால், அயன். (19) 1780. ஒன்றது வாலே உலப்பிலி தானாகி நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்றி யவையல்ல வாகுந் துணையென்ன நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே.1 (ப. இ.) உலப்பிலியாகிய சிவபெருமான் தன்னைவிட்டு என்றும் யாண்டும் பிரிப்பின்றி உடனாய் நிற்கும் திருவருளாற்றலைத் (தாதான்மிய சத்தியை) தனக்குத் திருமேனியாகவும் உலகுயிர்களை நடத்தும் திரு ஆணையாகவும் கொண்டு கருத்தளவான் இயக்குகின்றனன். அதுபோல் உயிர்க்குயிராய் நின்று உடங்கியைந்து இயக்கினும் பொருள் தன்மையில் தான்வேறாய் நிற்பன். பெற்றோரும் ஆசிரியரும் முறையே பிள்ளைகளையும் மாணவர்களையும் கைப்பிடித்து நடத்தியும் ஓதி ஓதுவித்தும் உடனாய் நிற்கின்றனர். அவ்வாறு நிற்பினும் பொருள்தன்மையில் பெற்றோர் ஆசிரியர் என்ற பெயர்ப்பொருளால் வேறுபடுகின்றனர். இவ் வொப்பே சிவபெருமான் இயைந்தும் இயந்திடா நிலைமைக்கு ஒப்பாகும். இம் முறையால் ஆண்டவன் இயைந்தியக்கும் நிலையைப், படியிலாப் பணியாதலின் விளையாட்டென்பர். படி - சம்பளம். அவன் என்னுள் நிறைந்துநிற்கும் அன்புப் பிழம்பாகும். அதனாலேயே அன்பு சிவம் ஒன்று என்று ஓதும் முறை வந்தது. (அ. சி.) ஒன்று அதுவால் - சத்தியால். என் உள்நேயம் - என் உள்ளத்தின்கண் நேயமாய் இருக்கும் சிவன். (20) 1781. நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு ஆயக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப் போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக 2விளையுமே. (ப. இ.) ஆருயிர்களின் அன்பின் நிலைக்களமாக நிற்பவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய சிவபெருமான். அவன் தன் திருவாணை ஆகிய சத்தியைத் தொழிற்படுத்துதலால் குடிலையாகிய மாமாயையுள் நாதமாகிய ஓசை தோன்றும். மேலும் நீக்கல் நிலைப்பித்தல் முதலிய ஐங்கலைகள் தோன்றும். இங்ஙனம் பலவாகக் காரியப்படினும் காரணமாயையாகிய விந்து என்றும் அழியாதது. வேண்டும் விளைவினைத் திருவாணையால் என்றும் நின்று தந்துகொண்டே இருக்கும். (அ. சி.) குடிலை - மகாமாயை. வீயத்தகா - கெடுதல் இலாத. விந்து - சுத்த மாயை. (21)
1. கட்டுமுறுப்பும். சிவஞானபோதம், 2. 1 - 1. 2. வித்தைகள். சிவஞானசித்தியார், 1. 1 - 15.
|