703
 

இதுகாறும் நம்பர் அருளின்றி நான் என் அறிவால் உணர்ந்த மதக் கோட்பாடுகள் அத்தனையும் விட்டொழித்தேன். சிவபெருமான் திருவடியைப் பணிந்தேன்; இறைபணி நின்றேன்.

(அ. சி.) உறுமலம் - ஆணவமலம். அத்தனை நீ - அவ்வளவே (தத்துவங்கள் அல்லாது தனித்திருக்கும்) ஆன்மாவாகிய நீ. கற்றன - மாறுபாடான கோட்பாடுகள்.

(4)

1787. விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

(ப. இ.) திருவருளாகிய திருவடியுணர்வைப் பொருந்தி அறிவருள் வெளியாகிய சிவபெருமானை உணருங்கள். அத்திருவருள் ஒளிமுன் பிறவி காரணமாக ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை உணர்த்தும் திருவருளாகிய இயற்கை அறிவு விளக்கைப் பெற்றுள்ளவர்கள், திருவருளாகிய விளக்கினைத் திருமேனியாகக் கொண்டு ஒளிர்ந்து விளங்கும் விளக்காகிய சிவத்துள் ஒடுங்கிச் சிவமாய்த் திகழ்வர். இஃது அகமும் புறமும் நிறைந்து வடியும் பாற்கலம் பாலாய்த் திகழ்வது போன்றும் நீர்நிறை மண்பாண்டம் நீராய் விளங்குவதுபோன்றும், அகத்தின் அழகு முகத்திற் புலனாவதுபோன்றும், முழுநீறு பூசிய முனிவர் போன்றும் புணர்ப்பில் தோன்றும் பொருவில் பெற்றியினை ஒக்கும். இவற்றைப் 'பால்வடியும் பாற்கலம் நீர்ப்பாண்டம் முழுநீறு - சால்முகம் போற் புணர்ப்பாம் சாற்று' என்பதனால் நினைவுகூர்க.

(அ. சி.) விளக்கு - அருள் ஒளி. வெளி - ஆகாய உருவத்தையுடைய சிவன். விளக்கை விளக்கும் விளக்கு - அருளைத் தெரிவிக்கும் ஞானம். விளக்கில் விளங்கு விளக்கு - அருளில் ஒளிரும் சிவம்.

(5)

1788. ஒளியும் இருளும் ஒருகாலுந் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள்
ஒளியிருள் நீங்க வுயிர்சிவ 1மாமே.

(ப. இ.) திருவருள் கைவரப்பெறாதார்க்கு ஒளியாகிய நினைப்பும், இருளாகிய மறைப்பும் ஒருகாலும் நீங்கா. திருவடியுணர்வு கைவரப் பெற்றவர்க்குச் சிவனையே மறவா நினைவோடிருப்பதால் ஏனைப் பொருள்கள் மாட்டுள்ள நினைப்பும் மறப்பும், நழுவியமை தெரியாதே நழுவிப்போம். நழுவாது நழுவுதல் அறிவிற்குத் தெரியாதே நீங்குவது. ஒளியோடு கூடிக் கண் ஒளியாகியும், இருளோடுகூடி இருளாயும் இருப்பதுபோல் ஆருயிரும் உலகியற் பொருளுக்கும் சிவத்துக்கும் வேறாம் தன்மையாய்ச் சார்ந்ததன்வண்ணமாய் நிற்பதொன்று. சுட்டுணர்வும் சிற்றுணர்வும் நிலையாத ஒளியாகும். ஆணவவல்லிருள் சார்பாலாம் இருளும் நிலையாததாகும். இவ் விரண்டும் நீங்கவே உயிர் சிவத்தின் முற்றுணர்வு எய்திச் சிவமாகவே இருக்கும். வீடுபேற்றின்கண்ணும் உயிர் சிவத்தின் வேறாமென்றனர்.

(6)


1. நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1.