(ப. இ.) பிங்கலையாகிய வலப்பால் உயிர்ப்பு எனப்படும் ஞாயிறும், அனலாகிய தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும், கலையெனப்படும் நடுநாடியும் ஆகிய நான்கும் கலையென்று அழைக்கப்படும். அருக்கனாகிய வலப்பால் உயிர்ப்பும், மூலத் தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் நடுநாடிக்கண் கூடிப் பொருந்த மேலோதிய நிறைநிலா ஆகுமென்றறிக. அகத்தே காணும் நிறைநிலாவென்பது திங்கள் அமிழ்தத் தீஞ்சுவை வெண்ணிலாவென்க. இதற்கு இடம் நெற்றிப்புருவம் என்க. (அ. சி.) ஒன்ற வாங்கும் - கூடும்படி வாசியை உள்ளடக்கும் கலை இடை நான்கு - இடைகலை, பிங்கலை, சுழுமுனை, அனல். (16) 1954. ஈரண்டத் தப்பால் இயங்கிய வவ்வொளி ஓரண்டத் தார்க்கும் உணரா வுணர்வது பேரண்டத் தூடே பிறங்கொளி யாய்நின்ற தாரண்டத் தக்கா ரறியத்தக் 1காரே. (ப. இ.) ஈரண்டமாகிய அனலும் கதிரும் உள்ள நிலைக்களங்களுக்கு மேலாக விளங்கும் அந் நிலவொளி புறத்தே காணப்படும் எவ்வகை அண்டத்தார்க்கும் அறிதற்கரியதாகும். அஃது அறிவுப் பிழம்பாய நிற்பது. அது பெரிய அண்டத்தூடே ஒளிர்ந்துகொண்டு திகழும் பேரொளியாகவுள்ளது. அச் சிவபெருமான் திருவருளால் அவ்வொளியினை நெருங்கத்தக்க தவமுடையவர் யாவர்! அவரே அறியத் தக்கவராவரென்க. இத்திருக்குறிப்புச் சிவபெருமான் வெண்திங்கட் கண்ணியான் என்னும் மெய்ம்மையினை விளக்குவதாகும். பெருமான் பிள்ளைப்பிறை அணிவான் என்பது ஆருயிர்களின் அறிவுக்கு அறிவய் அவ் வுயிரறிவினை நாளும் வளர்க்கும் குறிப்பாகும். வெண்திங்கள் கண்ணியான் என்பது அவ்வுயிர்க்கு இறவா இன்பச் சிறப்பறி வருள்தற் குறிப்பாகும். பிள்ளைப் பிறைசூடல் பேணுமறி வுக்கறிவாம், கொள்ளு திங்கள் கண்ணியின்பங் கூறு என்பதை நினைவுகூர்க. (அ. சி.) ஈரண்டம் - அனல், சூரியன். அண்டத் தக்கார் - அடையத்தக்கவர். (17) 1955. ஒன்பதின் மேவி யுலகம் வலம்வரும் ஒன்பது மீசன் இயலறி வாரில்லை முன்பதின் மேவி முதல்வன் அருளிலார் இன்ப மிலாரிருள் சூழநின் 2றாரே. (ப. இ.) கோள்கள் ஒன்பதும் விழுமிய முழுமுதற் சிவபெருமான் திருவாணைவழி இயங்குவனவாகும். இவ் வுண்மையினை அறிவார் அரியர். ஒருவரும் இலரென்றே கூறலாம். அவ்வொன்பதும் தனிப் பேராற்றலுடைய முதன்மைப்பொருள் என மயங்கும்படி செய்துவிட்டனர்
1. அண்ட. அப்பர், 5. 97 - 2. 2. வேயுறு. சம்பந்தர், 2. 85 - 1. " காளமேகந். " 2. 116 - 6. " ஊரிலா. அப்பர், 5. 97 - 7. " ஒருபிறப்பி. " 3. 6 - 5. " இந்திரியம். சிவஞானசித்தியார், 10. 2-1.
|