(ப. இ.) பித்தனுக்கு அந் நோயால் ஏற்பட்ட பிரகிருதியாகிய கிறுக்குத்தன்மை, தீர்ப்பான் தரும் தக்கமருந்தால் நீங்கப்பெறும். நீங்கவே நல்ல நிலைமையைப்போய்ப் பொருந்துவன். அதுபோல கண்ணொளியும் படலம் நீங்கக் காணும் இயற்கைத்தன்மை எய்தும். அந்நிலைபோல் நந்திக்கடவுள் ஆருயிர்கட்கு இருட்சார்பாம் மருள்நீங்கத் திருவருள் தந்தருள்வன். தரச் செவ்வி உயிர்களின் சித்தந் தெளிவினை எய்தும். அம்முறையில் அவனருளால் தெளிவெய்தினேன். தெளிவெய்தவே செயல் ஒழிந்தேன் என்க. (அ. சி.) பிரகிருதி - பித்தசுபாவம். (9) 2038. பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும் பராமய மென்றெண்ணிப் பள்ளி யுணரார் சுராமய முன்னிய சூழ்வினை யாளர் நிராமய மாக நினைப்பொழிந் தாரே. (ப. இ.) நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனாய மைந்தன் ஆகிய எட்டுறுப்பும் சிவபெருமான் புணர்ந்து நிற்கும் தட்டுறுப்பாகும். அவ் வெட்டும் அவன் திருவாணைவழிப் புடைபெயர்வன. எல்லாம் சிவமயம் என்று எண்ணும் தவத்தோர் அகத்தவமாகிய அறி துயிற் பள்ளிநீங்கார். பேரறிவுப் பேரின்பப் பெருவடிவாம் திருவடி நிலையினை எய்தும்பொருட்டு நானெறியுள் மேனெறியாம் அறிவு நெறியினை ஆயும் திருவினையாளர் பிறப்பு இறப்புத்துன்பம் நீங்கிச் சிறப்புத் திருவடியின்பமாக ஓங்கி வேறு நினைப்பு ஏதும் இன்றி இருந்தனர் என்க. முன்னிய: செய்யிய என்னும் வினைஎச்சம்; எய்தும் பொருட்டு. தட்டுறுப்பு - சார்புறுப்பு. (அ. சி.) பிரான்........எட்டும் - அட்ட மூர்த்தங்கள் (நிலம், நீர், அனல், வளி, வெளி, சந்திரன், சூரியன், ஆன்மா). பராமயம் - பரையின் மயம். சுராமயம் - ஆனந்த மயம். நிராமயம் - துன்பம் இன்மை. (10) 2039. ஒன்றிரண் டாகிநின் றொன்றியொன் றாயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்றிரண் டென்றே யுரைதரு வோர்க்கெலாம் ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் 1றானதே. (ப. இ.) ஆருயிர்கள் சிவனிறைவில் ஒன்றியிருப்பினும் மலநீக்கத்தின் பொருட்டுப் பிறப்பினை எடுக்கின்றன. அக் காலத்து வேறுபட்டு இருக்குமென்னின்; அது பொருந்தாது. பிறப்பேற்ற சிற்றுயிரும் பிறப்பளித்த பேருயிரும் எந்தக்காலத்தும் எந்த இடத்தும் பிரிந்து நின்றதில்லை. அப்படியன்று, பேருயிராகிய கடவுளே ஒன்றாயிருந்தது சிற்றுயிர் என வேறுபட்டு இரண்டா நின்றது. பின் ஒன்றாகிவிட்டது என்று கூறின், பெறுவானாகிய சிற்றுயிர் இல்லையாகி முடியும். சிற்றுயிர் - சீவான்மா. பேருயிர் - பரமான்மா. எனவே ஒன்றிரண்டாகி நிற்றால் என்பது : கலப்பால் சிற்றுயிரும் பேருயிரும் ஒன்றாகவுள்ளன. பொருள்
1. ஒன்றிரண். சிவப்பிரகாசம். உண்மை, 37. " நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1.
|