அதனால் நேரும் இருள்சேர் இருவினைப் பிறப்பையும் அந் நல்லார்க்கு வர வொட்டாது தீர்த்தருள்வன். இதுவே தென்னாட்டுச் சிறந்த சிவனெறியாகும். இந் நன்னெறியினை எண்ணங்கொண்டு நாடுவீராக. 'துஞ்சும் போழ்தும்' திருவைந்தெழுத்தும் நினைக்கும் தன்மையினை வரும் அப்பர் அருண்மொழியான் உணர்க : 'நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான் துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத் தஞ்சும் தோன்ற வருளும்ஐ யாறரே." அப்பர். 5. 27 - 3. (அ. சி.) மன்னா - மன்னும். உள்கும் - நினையுங்கள். பறந்து - திரிந்து. அலமந்து - நிலைகலங்கி. (1) 2065. செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல வரனெறி நாடுமி னீவிரே. (ப. இ.) செந்நெறிப் படரும் திருவினரே! ஒல்லும் வகையான் உங்கள் உள்ளம் செல்லுமளவும் சிவன் திருவடிக்கே செலுத்துங்கள். சிந்தையைச் செலுத்துவதென்பது திருவைந்தெழுத்தை வழுவாது தொழுது கணித்தல். தக்க முறையான் முப்பொருள் உண்மையாம் வாய்மையினை எடுத்துக் கூறுங்கள். சிலர் அறியாமையால் சிவன் இல்லை என்று கூறினும் எம் இறைவனாகிய சிவன் பெரிதும் உள்ளான். பெற்ற தாய் கிடையாதென்று உற்ற மகன் கூறினும் மற்று உலகம் கொள்ளாதல்லவா? நீங்கள் நல்ல அரனெறியை நாடொறும் நாடுங்கள். நாடுதல் - சிந்தைசெய்தல். (அ. சி.) செல்லுமளவும் - கூடியமட்டும். வல்ல பரிசு - இயன்ற அளவு. (2) 2066. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் 1நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லை2நுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் 3துய்மினே. (ப. இ.) பண்டு தென்னாட்டில் வழிபடும் முழுமுதற் கடவுள் வழிக்குலம் ஏற்பட்டது. முன்னாளில் எல்லாரும் செந்தமிழ்நாட்டில் சிவனை வழிபட்டனர் - தொழுதனர். அதனால் 'சைவர்' என்னும் ஒரு குலமே திகழ்ந்திருந்து. தொழில்பற்றிய குலம் பலவிருந்தாலும்
1. ஒன்றென்ற. சிவஞானபோதம், 2. 1 - 2. 2. பசித்துண்டு. சிவஞானபோதம், 8. 1 - 2. 3. வைத்தபொரு. அப்பர், 4. 95 - 5. " ஒருகாலத். " 6. 6 - 5. " எவரேனும். " 6. 61 - 2. " என்றுநா. " 6. 68 - 5.
|