(ப. இ.) ஓமென்று ஓதப்பெறும் ஓங்காரத்துள்ளே ஒப்பில் ஒரு மொழி தோன்றும். ஒரு மொழியெனினும் பெரும்பொருட்கிளவியெனினும் ஒன்று. இதனை மகாவாக்கியம் எனவுங் கூறுப. அவ்வோங்காரத்துள்ளே உருவும் அருவும் தோன்றும். உருவினைச் சகளம் என்ப. அருவினை நிட்களம் என்ப. இவ்வோங்காரத்துள்ளே ஆருயிர் வேறுபாடுகள் பலவும் உண்டாம். அவ் வேறுபாடுகள் மா, மாக்கள், மக்கள், ஆன்றோர், அறிவர், அமரர் (வானவர்) முதற்பலவாம். அவ்வோங்காரத்தாலேயே பிறப்பும் சிறப்பும் உறப்பெறும். பிறப்பு - சித்தி. சிறப்பு - முத்தி. (2) 2628. ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் 1பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. (ப. இ.) முப்பத்தாறாவது மெய்ஒலி, ஓங்காரம் ஒலியினின்று தோன்றுவது. வழிவழியாக ஏனையமெய்கள் தோன்றும் அம்முறையினால் ஓங்காரத்தினின்று ஐந்து பூதங்களும் தோன்றின என்று ஓதினர். மேலும் ஓங்காரத்தை இயைந்து இயக்கும் உரிமைத் தெய்வங்கள் அயன், அரி, அரன். ஆண்டான், அருளோன் என்பவராவர். அவர்களே ஐம்பூதங்களையும் முறையே இயக்குகின்றனர். அதனால் அப்பூதங்கள் ஓங்காரத்தினின்று தோன்றின என்றலும் ஒன்று. அவ்வோங்காரத்துள்ளே இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் அனைத்தும் தோன்றின. இயங்குதிணை - சரம். நிலைத்திணை - அசரம். அப்பாலாம் ஓங்காரத்துள் மூவகை உயிர்களும் சார்ந்தன. மூவகையுயிர்களாவன: ஒருமலம் உடையன, இருமலமுடையன, மும்மலமுடையன என்பன. அப்பால் ஓங்காரம் - ஓங்காராதீதம். இதனை மாகாரண ஓங்காரம் என்ப. அவ்வோங்காரத்துள்ளே ஆருயிர் உரு, அருளுரு, அருளோன் உருத்தோன்றும் என்ப. சரம்: நகர்வது. அசரம் - நகராதது. (அ. சி.) ஓங்கார அதீதம் - மகாகாரணப் பிரணவம். (3) 2629. வருக்கஞ் சுகமாம் பிரமமு மாகும் 2அருக்கஞ் சராசர மாகும் உலகில் தருக்கிய வாதார மெல்லாந்தன் மேனி சுருக்கமின் ஞானந் தொகுத்துணர்ந் தோரே. (ப. இ.) ஓமொழியின் இனமாகிய அகர உகர மகரங்கள் வருக்கம் எனப்படும். இவை இன்ப நிலையுமாகும். இறைவனுமாகும். அம்மூன்றன் தொகுப்பாகிய அருக்கம் சராசரமாகும். ஆண்மை மிக்க ஆதாரநிலைகளின் உருவமெல்லாம் ஓங்காரமாகும். ஓங்காரத்தின் உண்மையுணர்ந்தோர் திருவடியுணர்வாம் நிறைஞானத் தொகுப்புணர்ந்தோராவர். (அ. சி.) வருக்கம் - ஓங்காரத்தின் அம்சங்களாகிய அ - உ-ம். சுருக்கமில் - பரந்த. (4)
1. பாராதி. உண்மைவிளக்கம், 8. (பாடம்) 2. வருக்கஞ்.
|