ஈண்டு மனம் என்பது இறுப்பு மெய்யாகிய புத்தியினைக் குறிக்கும். அது புத்திக் காட்சியினை மானதக் காட்சியென்று வழங்குவதனான் உணரலாம். 'காண்டல் வாயின் மனந்தன் வேதனையோ டியோகக் காட்சி' (சிவஞானசித்தியார் அளவையிலக்கணம்-4) என்பதனான் உணர்க. மெய்கள் - தத்துவங்கள். ஆறு: நன்னெறி எனலுமொன்று. (அ. சி.) தானாய் - யாவற்றிற்கும் ஆதாரமாய். ஆறு அறிவு - ஐந்து புலனறிவும் மன அறிவும். (3)
15. சிவசொரூப தரிசனம் (சிவஇயல்புக் காட்சி) 2812. ஓதும் மயிர்க்கால் தொறுமமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை வேதம தோதுஞ் சொரூபிதன் மேன்மையே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் அளித்தருளும் திருவடிப்பேரின்பம் வேறுபட்டே யிருக்குமெனவும், ஒன்றாய்க் கலந்து ஒழிந்துவிடும் எனவும் கூறுவதற்கு ஓர் இயைபுமின்று. மாறுபடாது என்றும் ஒன்றுபோல் வேறற ஆருயிர்களுடன் கலந்துநிற்கும் இயல்பினது. அதனால் சிறப்பித்துச் சொல்லப்படும் மயிர்க்கால்தோறும் அப்பேரின்ப அமுது அளவிறந்தூறித் தெவிட்டா இன்பம் தேக்கிடச் செய்யும். உருவம் அருவம் உருஅருவம் என்று கொள்ளப்படும் பொது நிலைத் திருவுருவங்கள் மூன்றும் கடந்து இன்ன தன்மைத்தென எவராலும் சொல்லவொண்ணாத இயற்கை உண்மை அறிவு இன்ப வடிவினனாக என்றும் விளங்குபவன் சிவன். இதுவே செந்தமிழத் திருமறையோதும் சிவன்றன் சிறந்த திருவுருவ மேன்மையாகும். (அ. சி.) பிறழாத ஆனந்தம் - தவறுபடாத ஆனந்தம். வேதம தோதும் - தமிழ் வேதத்திலே கூறப்படும். (1) 2813. உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி யவனே இணரும் அவன்தன்னை என்னலு மாகான் துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் 1றானே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானும், கெழுமிய அடிமையாம் ஆருயிரும் மலர்மணம்போன்று வேறற விரவி என்றும் அழியாது ஒழியாது வழிநிற்கும் பழியில் பொருள்கள். அதனால் ஆருயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே, நெஞ்சத்தாமரையாகிய இணரின்கண் அவன்
1. சூடுவேன். 8. திருவம்மானை, 17. " உற்ற." அதிசயப்பத்து, 9.
|