393. தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி ஊடு மவர்தம துள்ளத்தின் உள்நின்று1 நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே. (ப. இ.) எட்டுத் திசைகளிலும் வாழ்வின் பொருட்டு ஆருயிர்கள் உடலை நாடுகின்றன. அந் நாட்டத்தை வினைக்கீடாக உடலோடு கூட்டி நிறைவேற்றியருள்பவன் மாநந்தியாகிய சிவபெருமான். குணஞ்செய்தல் என்பது அவ்வுயிர்கள் வேண்டியதையே அளித்து நலம்புரிதல். பிறவி எடுத்தவுயிர்கள் சிவனை அடைய வேண்டிய ஒழுக்க நெறியில் நில்லாது ஊடுதலாகிய மாறுபாட்டைப் புரிகின்றன. அம் மாறுபாட்டைப்புரியும் அவ்வுயிர்களின் உள்ளத்துள் மறைந்து நின்று அதனை ஆராயும் முறைமையினையும் மேற்கொண்டுள்ளான் சிவன். அவனருளால் அதனையும் அறிந்துள்ளேன் கூடும் குணம் - கூடும் தன்மை என்றலும் ஒன்று. நாடும் - நாடச் செய்யும் என்றலும் ஒன்று. இதற்குப் பிறவினை தன் வினையாய் நின்றதென்க. (26) 394. ஓராய மேஉல கேழும் படைப்பதும் ஓராய மேஉல கேழும் அளிப்பதும் ஓராய மேஉல கேழும் துடைப்பதும் ஓராய மேஉல கோடுயிர் தானே.2 (ப. இ.) சிவனும் சிவையும் கூடும் கூட்டத்தாலேயே உலகங்கள் காரியப்படுகின்றன. உடலோடு உயிர் கூடி வாழ்கின்றன. சிவனும் சிவையும் ஒன்றே இருநிலைப்பட்டுக் கூடி நிற்றலின் ஓராயம் என்றனர். ஓராயம் - ஒப்பில்லாத கூட்டம். இதனை அது தானால் என்னும் தாதான்மியம் என்ப. அவ்வாறே சிவனும் சிவையும் கூடிய ஓராயத்தால் உலகம் ஏழினையும் காத்தருள்கின்றனன். அதுபோல் துடைத்தும் அருள்கின்றனன். அதுபோல் உலகுடனும் உயிருடனும் கலந்து வேறற நின்றியக்குவதும் ஓராயமேயாம். உலகோடுயிர் தானே: உலகுயிர்களை இயைந்தியக்கும் சிவனே. (அ. சி.) ஓராயம் - சிவமும் சத்தியும் கூடிய கூட்டம். (27) 395. நாதன் ஒருவனும் நல்ல இருவருங் கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர் ஏது பணியென் றிசையும் இருவருக் காதி இவனே அருளுகின் றானே. (ப. இ.) எல்லாரானும் நத்தப்படும் முதன்மையுடையவன் நாதன். அவன் ஒருவனாகிய சிவபெருமானே ஆவன். நன்மைக்குரிய அரியும் அயனும் ஆகிய இருவரும் குற்றம் பொருந்திய தூவாமாயை ஆக்கப்பாடு
1. விள்ளத்தா. அப்பர், 4. 76 - 7. " வஞ்ச. திருக்குறள், 271. 2. சத்தியுஞ் சிவஞானசித்தியார், 1. 3 - 19.
|