237
 

25. பெரியாரைத் துணைக்கோடல்

525. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க் கருள் தேவர்பி ரானொடுங்
கூடவல் லாரடி கூடுவன் யானே.1

(ப. இ.) திருவருள் நினைவால் எவ்வகைத் தொண்டினுக்கும் உவப்புடன் முன்னிற்கும் ஒருவர் ஓடவல்லாராவர். அவரே சீல நெறியில் நிற்கும் சீரியோராவர். பாடவல்லார் நோன்பு நெறியினிற்கும் பண்பினராவர். திருமுறைத் திருப்பாட்டுக்களை ஓதியே வழிபாடாகிய பூசையினை நடாத்துதல் வேண்டும். அருச்சனை என்னும் மலர் தூவிப் போற்றுதலும் திருமுறைத் திருப்பாட்டாலேயே நடத்துதல் வேண்டும். அருச்சனைக்கு வேண்டும் போற்றித் தொடர்கள் ஆறு. அவை முறையே தனித்தனி ஐந்தொழிற்கும், ஐந்தொழிலும் சேர்ந்த ஒரு பெருநிலைக்கும் ஆகும். திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய போற்றித் திருத்தாண்டகம் ஐந்து. மணிமொழிப் பெருமானார் பாடியருளிய போற்றித் திரு அகவல் ஒன்று. ஆக ஆறும் அருளால் அமைந்த பேறு என்க. ஐந்தொழிற்கும் முறையே திருவுருவங்கள் மூத்த பிள்ளையார், இளைய பிள்ளையார், ஆலமர் செல்வன், அம்மை, அருளோன், என்ப. இவை அனைத்தும் ஒருங்கமைந்த திருவுருவம் அம்பலவாணர். இவற்றிற்கு வேண்டும் போற்றித் தொடர்த்திருப் பதிகத்தின் முதனினைப்பு : 1. பொறையுடைய. 2. எல்லாஞ். 3. பாட்டான. 4. வேற்றாகி. 5. கற்றவர்க. 6. நான்முகன் என்ப. அருளோன் - சதாசிவன். தேடவல்லார் அகத்தவமாகிய செறிவு நெறியின் நிற்கும் செம்மையினராவர். கூட வல்லார் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகு நிலையினவாகிய அறிவு நெறியின் நிற்கும் அன்பினராவர். நம் திருக்கோவில்களில் இத்தகைய பயிற்சி முறைகள் பண்டு நடந்து வந்தன. இடையே மயலுணர்த்தும் அயலவர் சூழ்வால் கிடந்தொழிந்தன போலும். இனிமேலேனும் முன் போன்று அவை புத்துயிர் பெற்றுத் திகழ்தல் வேண்டும். இவ்வுண்மை வரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியான் உணரலாம்.

"நல்ல நந்தன வனப்பணி செய்பவர்
நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்ப ணித்தொடை புனைபவர் கொணர்திரு
மஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லு நன்பக லுந்திரு வலகிட்டுத்
திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர் திருமுறை
எழுதுவோர் வாசிப்போர்."

- 12. கணநாதர், 3.

(இதன்கண் எண் பெருந்தொண்டு இயம்பப்படுகின்றன. இவற்றால் சிவபெருமானின் எண் பெருங்குணமும் எளிதின் எய்தும்.) செயற்கரிய


1. பெருமையால். 12. தடுத்தாட்கொண்ட, 196.

" பத்தராய்ப். ஆரூரர், 7. 39 - 10.

" மறப்பித்துத். சிவஞானபோதம், 12. 2 - 1.