காட்சி - வாயில்கள் ஒன்பதானும் பெறும் உணர்வுகள். இலை பலவாமே - அவ் வுணர்வுகள் அத்துணையின்றி அளவிறந்து தோன்றும். (அ. சி.) ஒன்பது ...இடம் - நாற்சந்தி. (19) 639. ஒங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல வாங்கி இரவி மதிவழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே. (ப. இ.) இம் மந்திரம் திரிபுக்கரணியைக் கூறுகின்றது. ஓங்கி....யோர்க்கே - மூலத்தீயின் கீழ்ச்செல்லுமாறு நடுநாடியைச் செலுத்தி வலப்பால் நரம்பின்வழி வரும் உயிர்மூச்சினை இடப்பால் நரம்பின்வழி யோடச்செய்யின், அங்ஙனம் செய்யும் அகத்தவ அறிஞர் உலகேழுஞ் செறிந்த ஒண்மையராவர். (20) 640. தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே. (ப. இ.) அகத்தவத்தோர் சிறந்த சிவபெருமான் திருவருள் துணையால் கட்டுற்ற பிணைமான்போல் தராசு நுனிபோல் உயிர் மூச்சைச் சமனுற வைப்பின் தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டோராவர். இதற்கு ஒப்பு விலைக்குக் கொடுக்கவும் உண்ணவும் அமைத்த வித்தாகும். உண்ணல் - தமக்குப் பயன்படுதல். கொடுத்தல் - பிறர்க்குப் பயன்படல். (21) 641. ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர் நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. (ப. இ.) திருவருள் துணையால் அகத்தவப்பயிற்சியால் உணர்வினுள் ஓடிச்சென்று ஒப்பில்லா ஒரு பெரும்பொருளைக் காணுதல் வேண்டும். அங்ஙனம் கண்டவர் தம் நாடியினகத்து அகவொலியை எழுப்புவர். அவர் நெற்றிப்புருவ நடுவின்கட் காணப்படும் தேனமிழ்தினைத் தேடிச்சென்று முகந்து உண்பர். பாடியாகிய உடம்பகத்து அறுபகையும், செறுபுலன் ஐந்தும் நீங்காது நின்றுகொண்டு பெருந்துன்பத்தினை ஓவாது புரிகின்றன. அவற்றை ஆண்டவன் மாட்டுக்கொள்ளும் 'அகனமர்ந்த அன்பி'னால் வெல்லுதல் வேண்டும். அவ்வன்பினர் அப் பகைவரை வென்றடக்குவர். நாடியின் - நடுநாடியின் வாயிலாக. தேன் நெற்றிபுருவ மதியமிழ்து. பாடி - பகைவர் தங்குமிடம் (உடம்பு). பகைவர் அறுபகையும் ஐம்புலனும். கட்டும் - அடக்கும். (அ. சி.) ஒரு பொருள் - குண்டலினி. பகைவர் - ஐந்து இந்திரியங்கள். (22)
|