(ப. இ.) அறிவிலாற்றலாகிய மாயையினைத் தொழிற்படுத்தும் திருவருளம்மையின் தன்மை நிறம் இருளாகும். நம் அண்ணலாகிய சிவபெருமான் வெளிச்சம் தருவதாகிய ஒளிப்பொருளாவர். புண்ணியப் பேறுடையார்க்குப் பொருளாகிய பயனாவது திருவடிப் பேரின்பம். மெய்யுணர்ந்த நாட்டத்தை (சிந்தை)ச் சிவபெருமான் இருப்பிடமாகக் கொண்டு ஒழுகுபவர் உள்ளத்துள் ஆதிப்பிரானார் நிறைந்த அருளினைப் புரிந்தருளுவர். (அ. சி.) இருளது சத்தி - சத்தியின் நிறம் கறுப்பு. (45) 1096 .ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதி பராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மனி மங்கலி ஓதமென் னுள்ளத் துடன்முகிழ்த் தாளே. (ப. இ.) தொடக்கமும் தொன்மையும் ஆகிய திருவருள் செம் பொருளாம் சிவனுடன் செம்பாதி உடம்பினள் ஆவள். சிவவுலகத்து வீற்றிருப்பவள்; அழகும் அமைதியும், மனத்தை இயைந்தியக்கலும் நன்மைப்பாடும் உடைய அம்மை, 'நமசிவய' என்று நாவழுந்த ஓதும் நம்மகத்து உடனுறைந்தருள்வள். முகிழ்த்தல் - தோன்றல்; உறைதல். (அ. சி.) பாதிபராபரை - சிவத்தில் பாதி ஆனவள்; இடப்பாகம் பெற்றவள். (46) 1097 .ஓதிய வண்ணங் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாமென் றறிகிலர் சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள் ஆதியென் றோதினள் ஆவின் கிழத்தியே. (ப. இ.) நல்லார் உளத்தினின்று ஓதியருளிய முறைப்படி நூல்களினெல்லாம் சிறந்த நூல் தொடக்கமாகிய அறநூலாகும். இவ் வுண்மையினைச் சிலர் அறியாதிருக்கின்றனர். இனங்களும் அவற்றின் வேறுபாடுகளும் அகன்று மெய்ம்மையாய் நிற்பவள் ஆதி என்னும் அருளம்மையாகும். இவ் வுண்மையினை உயிர்க்குயிராகிய திருவருளம்மை ஓதியருளினள். ஆவின் கிழத்தி - உயிர்க்குயிராகிய அம்மை. கிழத்தி - உரிமையுடையவள். ஆ - உயிர். (47) 1098 .ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந் தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே. (ப. இ.) ஆருயிர் அனைத்தையும் அடிமையாகக் கொண்டருளும் உடையாள்; நாவுக்கரசியார்; ஆவடுதுறையில் எழுந்தருளியிருப்பவள். பொருள்சேர் புகழாம் நன்மையினை மெய்யன்பர்கள் போற்றும் அருளோனாகிய சதாசிவக் கடவுளின் அருளாற்ற (மனைவி)லாம் அம்மை.
|