(ப. இ.) முற்றுணர்வாகிய சிவஞானத்துடன் கூடித் திருவருள் துணையால் தோணியாகிய சிவபெருமான் திருவடியினை ஓவாது அழைத்தால் அவர் திருவருளால் உடம்பு பொன்மயமாகும். பாரமாகிய தூவாமாயைத் தத்துவக் கூட்டங்களும் பழமலத்தால் நேர்ந்த மாயாகாரியமாகிய பழம்பதி என்னும் உடம்பும் அகலும். இவ் வுண்மையினைச் சிவனடியார்பால் நேரிற் கண்டிருந்தும், மலக்கொடும் வினைஞர் சிவபெருமான் திருவடியிணையினைச் சேருமாறு நினைக்கிலர். (அ. சி.) தோணி - சிவத்தின் திருவடி. பறி - பொன் போன்ற உடல். பாரம் - தத்துவக் கூட்டம். பழம்பதி - அநாதி மாயையால் ஆகிய சரீரம். குறி - கருத்து. (5) 1530. மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே.1 (ப. இ.) நிலைபெற்ற ஒப்பில்லாத சிவபெருமான் அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு பொருந்தி விளங்கும் மனோமயன் ஆவன். இவ் வுண்மையினை மெய்யடியார்கள் கூறக் கேட்கும் மக்கள் அதனைப் பொருட்படுத்துகின்றாரில்லை. பொருட்படுத்தாது இகழ்வார் தாழ்ந்த அறிவினையுடையவராவர். அவ் வழிச் செல்லாது சிவபெருமானை மனங்கொண்டு நெருங்கித் தொழுங்கள். தொழுதால் ஒப்பில்லாத அவன் அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அருளவே அவன் திருவடியினைக் கூடி இன்புறலாம். (அ. சி.) மன்னும் - நிலைபெற்று இருக்கும். ஏழைகள் - அறிவில்வறியவர். துணையிலி தன்னை - ஒப்பற்றவனை. (6) 1531. ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.2 (ப. இ.) ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின்தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் அறும். அறவே சிவனடியின்ப நுகர்வு கைகூடும். இந் நிலைமை கைகூடாதவர் தங்கட்கு இறப்பு உண்டென எண்ணார். எனவே பிறவாமையைச் சார்வுறார். இத்தகையோர் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர் - நுகர்வு : துய்ப்பு : அழுந்தியறிதல் : அனுபவம். (அ. சி.) நீங்காச் சமயம் - மயக்கம் நீங்காத பிரம சமயம். (7)
1. 'முழுத்தழல். அப்பர். 4. 113 - 5. " அக்கு" 5. 97 - 14. 2. ஓங்காரமேநற். உண்மை விளக்கம். 35.
|