1649. உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள் ளாதார் கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே. (ப. இ.) உடலிற் காணப்படும் வேடமாகிய திருக்கோலம் உயிரினைப் பொருந்தி உயிரினுக்குத் துணையாகாது. உடல் உயிரை விட்டு நீங்கினால் அவ் வேடமும் உடனே நீங்கும். உடலின்கண் தங்கும் உயிர் அழிவில்லாத உண்மையான மன்னுயிராகும். இத்தகைய உண்மையினை உணர்ந்துகொள்ளாதார் கடலிற்பட்ட மரக்கட்டை இடையறாது அங்கும் அங்கும் அலைவதுபோன்று பிறவிப் பெருங்கடலினை நீந்தமாட்டாது பிறந்து இறந்து உழன்று அதனுள் அழுந்துவர்.(அ. சி.) உடல் உயிர் - உடலில் உள்ள உயிர். கடலில் அகப்பட்ட கட்டை - கடலில் அகப்பட்ட கட்டையைப்போல் பவக்கடலில் அகப்பட்டுப் பல அண்டங்களிலும் பிறவியெடுத்து எடுத்து அலைவர். (2) 1650. மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத் தயலற் றவரோடுந் தாமேதா மாகிச் செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே.1 (ப. இ.) உலகப் பொருளின்கண் மருளாகிய மயலற்று அதற்கடிப்படையாகிய ஆணவவல்லிருளற்று, அதன் வயத்தாகிய கரியமன மற்று, அம் மனம் பற்றும் கயல்போலும் கண்ணையுடைய பொதுமகளிர் தம்கை இணக்கம் அற்று, இவை யனைத்தும் அறுதற்கேதுவாகிய பொதுத்தையலர் கூட்டமற்ற மெய்யடியாரோடு அவரே தாமாகித் தன் முனைப்பாகிய செயலற்று ஒழுகுவார் உண்மைச் சிவக்கோலத்தராவர். (அ. சி.) கையிணக்கு - கூட்டுறவு. தயலற்றவர் - தையல் அற்றவர்; பெண் ஆசை இல்லாதவர். செயல் - உலக விவகாரம். (3) 1651. ஓடுங் குதிரைக் குசை2திண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் தேடும்இன் பப்பொருள் சென்றேய்த லாமே. (ப. இ.) ஓடுங் குதிரையாகிய உயிர்ப்பின் குசையாகிய அளவுட்படுத்தும் கடிவாளத்தைத் திண்ணமாகப் பற்றி உயிர்ப்பினை அடக்குங்கள். இன்றியமையாத அச் செயலின்றி வெறும் பொய்க்கோல மட்டும் பூண்டு திரிவதால் பயனொன்றும் இல்லை. மாந்தர்கள், அப் பொய்க்கோலம் கொள்ளுதல் வேண்டா. நந்தியாகிய சிவனை உளத்தின்கண் நாடுங்கள்; திருவருளால் நம் பெருமானை உணர்வின்கண் தேடுங்கள் .தேடினால் அழியா உண்மை அறிவு இன்பப்பொருளாகிய
1. பொருட்பொருளார். திருக்குறள், 914. 2. குசையு. அப்பர், 5. 71 - 1.
|