1196
 

மூன்றற்கும் வலிது திருவடிக்கண் வைக்கும் அன்பு. அவ்வன்பே சிவபெருமான் திருவருள் இன்பினைத் தரவல்லது. பொற்றாலியின் சிற்ப்பினை வருமாறு நினைவுகூர்க:

"பெண்ணே அணிபூணும் பெய்வர்பிற எல்லாரும்
கண்ணேய்நற் காதலன்றான் கட்டுவனால் - கண்ணேயாம்
நற்றாலி என்னும் நழுவா நகையாகும்
பொற்றாலி பூணல்முறை போற்று."

(அ. சி.) கொட்டு - இந்திரிய நுகர்ச்சி. தாலி - சுகதுக்க அனுபவம். பாரை - பொருள்களை அனுபவிக்கும் ஆசை. இட்டம் - திருவருட்சத்தியின் சம்பந்தம்.

(43)

2869. கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பா னொருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன் 1னாமே.

(ப. இ.) கயல்போல் மாறிமாறிப் பிறழும் இவ்வுலகியல்பினை நிலையும் உறுதியும் உலைவில் தலைமையும் உடைய ஒன்றென மாறான எண்ணங்கொண்டு கண்டவர், பிறப்பு இறப்பு என்னும் பெரும் பிறழ்வுத்துன்பினைக் கண்டுகொண்டேயிருப்பர். அழிவில் முயல்வாம் நற்றவமாகிய சீலம், நோன்பு, செறிவு என்னும் முந்நிலையும் கண்ட மூவரும் செந்நெறிச் சென்று 'நடுவாக நன்றிக்கண் தங்கியான்' எய்தும் வாழ்வினராய் வாழ்வுறுவர். நடுவாக நன்றிக்கண் தங்கியான் வாழ்வு சமரச சன்மார்க்க வாழ்வு. இதனையே பொதுநெறி வாழ்வெனக் கூறுப. இதுவே திருவள்ளுவர் உள்ளிட்ட செம்பொருட்டுணிவினராம் தென்புலச் செல்வர் வாழ்வு. போர்ப் பறையனையவாய் வாய்ப்பறை கொட்டும் சமயக்கணக்கர் தரும் பூசலை நேகமெனப் பிடித்து நிற்பானொருவன் பாசவலைப்பட்டு ஆசைமிக்குற்றுப் பிறப்பன். செந்தமிழ் நெறிநூல் துறைநூல்களாகிய வேதாகம மறையொன்று உறுதியாகப் பற்றி வாழ்பவன் அசையா நிலையென்னும் துருவம் போன்றவன் ஆவன். அவன் சுடச்சுடரும் பொன்போல் மலம்நீங்கி ஒளிவிட்டுத் திருவருட்டுணையால் சிவனடி எய்திச் செம்பு செழும் பொன்னாம் விழுமிய சிறப்பு நிலையினை எய்துவன். செங்கல் செழும் பொன்னாக்கும் விழுமியோன் சிவனல்லவா? அவன் ஆருயிரைத் தன் வண்ணம் ஆக்கியருளும் உண்மை வண்மை அருளுக்கு அடையாளம் அல்லவா அது? அங்ஙனமே அருள்வன். துருவம் - அசையாநிலை.

(அ. சி.) கயல் - மாறி மாறி வருகின்ற உலகம். முயல் - தவ முயற்சியால் அடையக்கூடிய சிவம். மூவர் - சரியை, கிரியை, யோகவான்கள் (ஞானவான்கள் அடைதல் நிச்சயமாதலால் அதைக் கூறாமல் விட்டார்). பறையொன்று பூசல் - ஆரவாரமுடைய சண்டை. மறையொன்று கண்ட - தமிழ் வேதப் பொருளாயுள்ள ஒன்றைக் கண்ட. துருவம் - ஆன்மா. பொன்னாமே - மலம் நீங்கிச் சிவத்தோடு கலக்கும்.

(44)


1. செம்பிரத சிவஞானசித்தியார், 11. 2 - 2.