(ப. இ.) திருவருட் கல்வி கற்ற செந்நெறியாளர் அவ்வருளால் எண்ணிய காலத்து அவர்தம் அறிவெண்ணத்து ஓர் அகக்கண் உண்டாகும். கற்றறிவல்லார் அவற்றினைக் கருதி உரை செய்வர். அவர்கள் கற்றுள்ள அறிவு காட்டுந்தன்மை வாய்ந்த கண்ணாகும். அக்கண் பக்கத்தே உள்ளது. கற்றறி : கற்றறிவு என்பது ஈறுகெட்டு நின்றது. காட்டக் கயலுள : காட்டு + அக்கு + அயலுள - காட்டக் கயலுள. காட்டு - காட்டுந்தன்மை. அக்கு - கண். அயல் - பக்கம். (2) 279. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின்1 தொழுதபின் மற்றொன் றிலாத மணிவிளக் காமே. (ப. இ.) காலமுண்டாக என்பது போல் இளமைக் காலத்து அறிவு ஆற்றல் ஆள்வினையுடைமை முதலியன தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியாக விருக்கும். அதுவே தொழுதற்கு வாய்ப்புடைய காலம் என்றும் ஒருபடித்தாய் மாறா நிலையுடையனாய் நிற்பவன் சிவன். அவன் திருவடியினைச் சேர்ப்பிக்கும் மெய்யுணர்வுக் கல்வியினைக் காலம் போக்காது ஓவாது, விரைந்து கற்றலைச் செய்ம்மின். கற்றலென்பது கற்றபடி அவன் திருத் தொண்டினை அருளால் புரிவது. அத் திருத் தொண்டினால் பாவங்கள் அற்றொழியும். அச் சிவனைப் புகழ்ந்து பாடும் திருமுறைத் திருப்பாட்டுக்களை வழுவின்றிப் பொருளுணர்ந்து ஓதி அருள் நினைவுடன் தொழுங்கள். தொழுதபின் தனக்குத்தானே ஒப்பாய் வேறோர் உயர்வும் ஒப்புமில்லாத அழியா இயற்கை மணிவிளக்காம் சிவபெருமான் திருவருள் புரிவன். பொருளுணர்ந்து சொல்லவேண்டு மென்பதைச் 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார், செல்வர்' என்னும் திருமறை முடிவான் உணர்க. சொற்குன்றலின்றி - சொல்லின்கண் வழுவில்லாமல். (அ. சி.) மற்று ஒன்று - வேறு ஒப்பு. (3) 280. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்2 பல்லி யுடையார் பாம்பரிந் துண்கின்றார் எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமு3 மாமே. (ப. இ.) சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப் பெற்றவரே உண்மைக் கல்வியுடையாராவர். அவர் திருவருளால் திருவடியை நாடி இவ்வுடம்பினையும் மிகை என்று உட்கொண்டு தொண்டின்கண் விழைந்தோடிச் செல்கின்றனர். தொடர்பாக ஒன்றன்பின் ஒன்று பல்குவதற்கு இடனாக இருப்பதால் உடலுக்குப் பல்லி என்று பெயர். பல்குவதையுடையது பல்லி. அத்தகையவுடம்பின்கண் பற்றுடையார் பாம்பாகிய குண்டலினியை அரிதலாகிய வருத்தத்தினைச் செய்து வாழ்கின்றார்.
1. சொற்பாவும். அப்பர், 6. 67 - 2. 2. மற்றுந் தொடர்ப். திருக்குறள், 345. 3. வந்து. 12. சண்டேசுரர், 59. " இரும்பைக். சிவஞானசித்தியார், 11. 2 - 5.
|