நிலைக்களனும் அவனே. அஃதொடுங்கும் ஒடுக்கச் சிவனும் அவனே. தனக்கு வேறாக ஏதும் இன்மையால் வேற்றுடல்களென்று கூறப்படுவதனைத்தும் அவனே யாகும். படிப்போர் பள்ளிக்கூடத்தையும், குடியிருப்போர் வாடகை வீட்டையும், ஊர்ந்து செல்வோர் கூலி ஊர்தியையும் தம்முடைய என்று பேசுந் தன்மை இதற்கொப்பாகும். உண்மையான் நோக்கினால் இவ்வுடைமைகளுக்குரிய உடையார் வேறென்பது புலனாகும். அதுபோல் எல்லாப் பொருளுக்கும் உடையவன் சிவனே. அவனே பெருந்தெய்வம். எல்லாவற்றையும் இயைந்தியக்கும் காற்றுப் போல் தோற்றமின்றித் தொழிலால் தோன்றுபவனும் அவனே. அவனே ஈசன் எனப்படுவன். அவன் விண்போல் எங்கணும் கலந்து நின்றருளினன். சிவபெருமான் விண்போல் இடங்கொடுத்தும், காற்றுப் போன்றியைந்தியக்கியும், தீப்போல் ஒளிகொடுத்தும், நீர்போல் துப்பருளியும், நிலம்போல் நலமுறத் தாங்கியும் நின்றருள்கின்றனன். துப்பு - உணவு. (அ. சி.) ஊற்றமும்- ஆதாரமும். ஓசை - நாதம். வேற்றுடல் - உயிர்க்கு வேறாகிய உடலும். காற்றது - காற்றுப்போல. (27) 2967. திகையனைத் துஞ்சிவ னேயவ னாகின் மிகையனைத் துஞ்சொல்ல வேண்டா மனிதரே புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானன்றே. (ப. இ.) உற்றுணரும் நற்றிறமில்லா மனிதரே! எல்லாத் திசைகளிலும் சிவபெருமான் நீக்கமற நிறைந்து நின்றருள்கின்றனன். அங்ஙனமிருப்பவும் அவனுக்குப் புறம்பாக ஓரிடத்து ஓரிறைவன் உண்டெனக் கூறுவது உண்மைக்கு மாறாகும். எப்பெயரிட்டு எவ்வுருவமைத்து எங்ஙனங் கூறி வழிபடினும் அவையனைத்தும் சிவபெருமானையே சாரும். நீரனைத்தும் ஒன்றாய், மின்சாரம் அனைத்தும் ஒன்றாயிருப்பினும் வெளிப்பட்டுப் பயன்தரும் காலமும் இடமும் கோலமும் பெயரும் வெவ்வேறாதலின் வேறுபடுத்தி வழங்குகின்றோம். அங்ஙனம் வழங்கற் பெயரான் வேறுபடினும் பொருள் ஒன்றேயாம் உண்மை இதற்கொப்பாகும். மேலோங்கிக் காணப்படும் புகையெல்லாம் தீயின்கண் ஒடுங்கி நின்று தோன்றுவனவே. அதுபோல் வெளித்தோன்றும் உலகப் பொருள்கள் அனைத்தும் எங்க ஆதிப்பிரானாகிய சிவபெருமானின்கண் ஒடுங்கி நின்று தோன்றும் முகை-தோற்றம். (அ. சி.) திகை-திக்குகள். புகை . . . . . முகையனைத்தும் - புகை மண்டிய வேள்வித்தீயில் சேரும் பொருள்கள் எல்லாம். (28) 2968. கலையொரு மூன்றுங் கடந்தப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பன் நரையில்லை யுள்ளுறு முள்ளவன் 1தானே. (ப. இ.) இடப்பால் நாடி, வலப்பால் நாடி, நடுநாடி ஆகிய முக்கலைகளையும் கடந்து அப்பால் நின்றருள்கின்றவன் சிவபெருமான். அவனே
1. உலகெலா. சிவஞானசித்தியார், 2. " ஈறில். அப்பர், 5. 97 - 5.
|