310. தோன்றிய எல்லாந் துடைப்பன்1 அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. (ப. இ.) எக்காலத்தும் யாண்டும் எல்லாவற்றையும் ஒருங்கு படைப்பவன் சிவன். அம் முறையான் அவன் அந்தத்தைச் செய்கின்றவன் ஆவன். அதனால் அவனை மெய்கண்ட நூல் அந்தம் என ஓதிற்று. பேரொடுக்கத்தைச் செய்பவன் சிவனே. அவனையன்றி வேறு யாரும் இலர். அவனே ஆண்டான். அவன் திருவடியை ஏன்று நின்றார் நடுவு நின்றாராவர். அவன் திருப் பெயராகிய 'சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தினைத் திருவருளால் இடையறாது முயன்று உளங்கனிந்து ஓதினவரும், அவ் வைந்தெழுத்தினையே அறிவுறப்பற்றி நின்ற வரும் நடுவு நின்றாராவர். இத் திருமறை நடுவு நின்றார் தன்மையினை நவிலுகின்றது. அவனன்றி என்று என்பதனை அவன் நன்றி என்று எனப்பிரித்துச் சிவபெருமான்றன் நல்ல திருவருளை எய்தி என்றலும் ஒன்று. மூன்று : முயன்று என்பதன் திரிபு. நான்று - பற்றி. (அ. சி.) நான்று - பற்றி. (4)
17. கள்ளுண்ணாமை 311. கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே.2 (ப. இ.) தூய பால்தரும் பசுவாகிய ஆன், செஞ்சாலி அரிசி கழுவிய நீராகிய கழுநீரை வயிறாரப் பருகப் பெற்றால் பின் விடாய் நீக்கு தற்பொருட்டுக் குளந்தொறும் சென்று வெறும் புனலை நாடாது. என்னை? மீண்டும் கழுநீரையே கருதிவரும் ஆகலான் என்க. கழுநீர் அனைய சுவைமிக்க தேறலாகிய இனியதேனைப் பருகுதற் பொருட்டு விழைவர் சிலர். அவ் வேட்கையுற்றவர் தங்கள் உடலையும் உணர்வையும் ஒருங்கு சுருக்கும் முழுமூடத் தன்மை வாய்ந்த இயற்கையும் செயற்கையுமாகிய மயல்சேர் கள்ளினை யுண்பர். அவர்கள் அறமுறையும் அருள் முறையும் அகன்று பாவநெறியிற் செல்வோராவர். செழுமை வாய்ந்த பழுதில் இன்பமும் விழுப்பொருளாம் சிவனடிப் பெருவாழ்வும் என்றுங் குன்றாது தரத்தக்கவன் சிவன். அவன்பாலே உள்ள சிவானந்தத் தேறலாகிய மதுவினையே நடுவு நின்றார் உண்பர். அத் தேறலே ஆருயிரின் அன்பறிவு ஆற்றல்களை விளக்கும் இறவாத இன்பத்தழுத்தும் அறவாழி
1. அவனவள். சிவஞானபோதம், 1. " பெருங்கடன். அப்பர், 4. 113 - 7. 2. காயத்துள். திருவுந்தியார், 43. " தெள்ளத். அப்பர், 5. 91 - 10.
|