608. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. (ப. இ.) ஒருவர் வீண் எண்ணங்களாகிய கற்பனையற்று மூலத்தழல் வழியே சென்றால் திருவுள்ள நோக்கத்தால் எல்லாவற்றையும் படைத்தருளிய சிவபெருமானைக் காணலாம். அப் பேரொளிப் பொற்பினைக் கூடும் திருவடியுணர்வு கைகூடும். கூடவே, சிவபெருமானாக வீற்றிருக்கும் திருவடிப்பேறு உண்டாகும். சிற்பன் - உள்ளத்திருக் குறிப்பால் உலகைப் படைத்தருளும் முழுமுதல். தற்பரமாக - ஆவிகள் முழுமுதற் சிவமாயிருக்க. தகுந்தண் சமாதி - பிரிவிலாத் திருவருள் நிட்டையாகும். (அ. சி.) கற்பனை - வீண் சிந்தனைகள். கனல் - மூல அக்கினி. புணர்மதி - சிவத்தோடு கலக்கும் அறிவு. (11) 609. தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங் குலைப்பட் டிருந்திடுங் கோபம்1 அகலுந் துலைப்பட டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே. (ப. இ.) தலைப்பட்டிருந்திட - திருவருள்வழி நின்றிட வலைப் பட்டிருந்திடும் மாதுநல்லாளும் - வலைபோல உயிர்மூச்சை நடுநாடியிற் செலுத்தாது தடுத்து நிற்கும் குண்டலிசத்தி. குலைப்பட்டிருந்திடும் - மறைத்தலை நீங்கிநிற்கும். கோபம் - முனமருவு மறைப்பாற்றலின் சினம். அகலும் - திருவருளாய் விளங்கும். துலைப்பட்டிருந்திடும் - தராசுமுனை போன்று நேர் நிற்கும். இவையனைத்தும் திருவருள் வழிநிற்கும் ஒரு பெரும் செந்நெறிச்செல்வர்க்கே யுண்டாம். (அ. சி.) தத்துவம் - மெய்ப்பொருளான சிவம். தூங்கவல்லார் - யோகம் செய்பவர். (12) 610. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்2 ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடிபணிந் தன்புறு வாரே. (ப. இ.) இயற்கைப் பேரொளிப்பிழம்பாய் நிற்கும் முழுமுதற் சிவபெருமானும், ஆதியும் - பிரிவிலாத் திருவருளும், உள்நின்ற - இருவர் நடுவாக நின்ற (சிவயசிவ). சீவனும் - ஆவியும். ஆகுமால் - தானே தானாச் செய்தமையால் சிவமாகும். ஆதிப் ........வாரே - படைப்போனும் காப்போனும் முழுமுதற் சிவபெருமான் திருவடியைப் பணிந்து இடையறா அன்புசெய்வர். (13)
1. இனையபல. சிவப்பிரகாசம், 30. 2. தன்னுணர. சிவஞானபோதம். 12. 3 - 1.
|