(ப. இ.) உடம்பகத்துள்ள ஒன்பது தொளைகள் வழியாகவும் தண்ணுமையாகிய பறையோசை முழங்கும். அங்குத் தேவர்க்கும் மூவர்க்கும் மற்று யாவர்க்கும் மேலாம் சிவபெருமான் இன்பக் கூத்தியற்றுவன். திருவடிப் பேற்றிற்கு முன்செல்லும் மெய்யுணர்வு விளக்கொளியாய் விளங்கும். அவ் விளக்கத்தால் காலைத்தோன்றும் கதிரவன்ஒளி சங்கின் நிறமும் திங்களின் நிலவும்போன்று காணப்படும். (அ. சி.) ஆலிக்கும் - ஒலிக்கும். ஒன்பதில் - ஒன்பது துவாரங்களையுடைய தேகத்தில். காலைக்குச் சங்கு கதிரவன் - சூரியன் சங்கின் நிறமுள்ள சந்திரன் போன்று தோன்றுவன். (17) 848. கதிரவன்1 சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ னீச னிடமது தானே. (ப. இ.) ஆருயிரின் அகவைக் காலத்தை அளக்குங் கருவிகள் ஞாயிறும் திங்களும் ஆகும். அகவை - வயது. உள்ளங்கவர்கள்வனாக ஒளித்து உடன்நிற்கும் சிவனுக்குள் திருவருள் பொழிமழை போன்று அமிழ்தாய்த் திகழும். அண்டத்தப்பாலும் சென்று முழங்க நடிக்கும் சிவன் நெஞ்சத்துச் செறிந்துநிற்பன். அதனால் அந் நெஞ்சிடமே எழுந்தருளி முன்தோன்றும் இறைவன் இருப்பிடமாகும். (அ. சி.) பொதிர் - ஒளித்தல். மழை - அமுதம். (18) 849. உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.2 (ப. இ.) மூல முதல் புருவநடு ஈறாகவுள்ள நிலைக்களங்கள் ஆறும், அடியே படைப்புடன் காப்புத் துடைப்பு, முடியே மறைப்பருளாம் முன் என்ப. அவற்றுள் படைப்புக்களமாம் கொப்பூழின்கண் தோன்றிச் சுடர்விட்டெழும் ஒளிப்பிழம்பை வணங்கி வழிபடும் மறையினை ஆரும் அறிகிலர். வழிபடும் அம் மறையினை யாவரும் அறிந்தபின் தந்தையாகிய சிவத்திற்குமுன் ஆவியாகிய மகன் தோன்றினன் என்ப. இது, 'சிவயசிவ' என்றும் செந்தமிழ்த் திருவைந் தெழுத்தின் மறையின்கண் சிகரத்துக்கு முன் யகரம் நிற்கும் நிலையினையே தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பதைக் குறிக்கும். எனவே நிலைக்களமாகிய ஆதார வழிபாட்டுக்குரிய மறை திருவைந்தெழுத்தே என்க. கொப்பூழுக்கு முன்னிடமாகிய மூலத்தில் ஓம் மொழிப் பிள்ளையார் தோன்றியதைக் கூறுதலும் ஒன்று. இம்முறையில் ஆறிடங்களுக்கும் முறையே 1. ஓம்
1. நாளென. திருக்குறள், 334. 2. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1. " துஞ்சலும், சம்பந்தர், 3. 22 - 2.
|