7. அரசாட்சி முறை 95. கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்1 நல்லாரைக் காலன் நணுகநில் லானே. (ப. இ.) அறமுறை கல்லாது, ஆண்டவன் நினைவினைக் கொள்ளாது, அருள்வழி நில்லாது, மருள்வழி யொழுகும் மன்னனே கல்லா அரசன் எனப்படுவன். உயிரையும் உடலையும் காலம் பார்த்துப் பிரிக்கும் கூற்றுவன் காலன் எனப்படுவன். இவ்விருவரும் துன்புறுத்தும் வன்செயலால் ஒருங்கொப்பர். ஆயினும் முறைமை வழுவிய பழி படுகல்லாவரசனைக் காட்டிலும் முறைமை வழுவாத காலன் மிக நல்லன். காலன் காலக்கணக்கை முறையாகக் கொண்டு நடப்பவன். அதுபற்றியே 'காலனும் காலம் பார்க்கும்' என்னும் கட்டுரையும் எழுந்தது. நல்லொழுக்கங் கல்லாத அரசன், அறமாகிய மறைநூலினை ஆன்றோருடன் ஆய்ந்தறிந்து உளங்கொண்டு அதன்படி ஒழுகான். அதனால் எக்காரணமுமின்றி நல்லவர்களையும் நினைத்த நினைத்தபடி கொல்லச் சொல்லி அல்லலுறுத்துவன். திருவடியுணர்வு கைவரப் பெற்ற நல்லாராகிய சிவஞானிகளைக் காலன் நெருங்கான்: கூன்பாண்டியன் ஆளுடைய பிள்ளையார் திருமடத்தில் தீவைக்க இணங்கியது கல்லா அரசன் கொடுமைக்குக் காட்டாகும். (அ. சி.) கல்லா அரசன் - அரச நீதிகளைக் கல்லா அரசன். மனுநீதி கண்ட சோழன் செய்த நூல், திருக்குறள் முதலியன. மனுஸ்மிருதி அல்ல. (1) 96. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாள்தோறும் நாடி யவன்நெறி நாடானேல் நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்2 நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. (ப. இ.) வேந்தனாம் சிவபெருமானின் மெய்த்துணை கொண்டு நாடாளும் மன்னவன் தன் நாட்டில் ஒவ்வொரு நாளும் பிறர்க்கென வாழும் பெரியோரின் தவநெறி செம்மையாக நிகழ்கின்றதா என்று கண்காணித்தல் வேண்டும். தவநெறி பிழைத்தாலும் அந்நெறிக்குப் பிறர் ஊறு இழைத்தாலும் நாட்டினுக்குப் போக்க முடியாத பொல்லாங்கு விளையும். அதனால் இன்றியமையாத கண்காணிப்பு முதற்கண் தவ நெறிக்கண் வேண்டும். அதன் பின்பு மன்னவன் தன்பால் ஏதும் குற்றம் உளதா, என்று ஆராய்தல் வேண்டும்; என்னை? 'தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின், என்குற்றமாகும் இறைக்கு' என்பது
1. கல்லார்ப்- திருக்குறள், 570. " குற்றொரு ஆரூரர், 7-35-4. 2. மாநிலங். 12. மனுநீதிகண்ட புராணம், 36. " நாடொறு. திருக்குறள், 553.
|