அவள். மாணிக்க மணியொத்த செந்நிறம் வாய்ந்த திருமேனியுடையவளும் அவளே. அவள் கரையில் பல மணிகள்சேர் பொன்னாடையுடையவள். விடமி - தண்டிப்பவள். கல்லியல் - மாணிக்கவண்ணம். பன்மணித்தான - பல மணிகளாலமைந்தன. (அ. சி.) விடமி - நியாயத்தைத் கடைப்பிடித்தவள். கல் - மாணிக்கக் கல். இயல் - வண்ணம். பல் இயல் ஆடை - பலவிதமான. ஆடைகள்; மேகலை, இடைகலை, கச்சு முதலியன. (8) 1059 .பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. (ப. இ.) பல மணிகள் அழுத்திய ஒளிமிக்க பல உறுப்புக்களையுடைய திருவடியும், புகழ்ந்து சொல்லப்படும் மணிகள் இழைத்த குண்டலம் அணிந்த காதும் உடையவள். மான்போலும் கண்ணையுடையவள். நல்ல விளக்கமுள்ள ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றையும் கண்ணாகவுடையவள். பொன்போல் விளங்குகின்ற தீவண்ணத் தம்மை மிகவும் களிப்புறுகின்றாள். கோடி - ஒருவகை முடியுறுப்பு. உழை - மான். நயனம் - கண். வன்னி - தீ. பூரித்தல் - களிப்புறுதல். (அ. சி.) உழை - மான். வன்னி - அக்கினி. (9) 1060 .பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளே யோர் ஆரியத் தாளுண்டங் கெண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வருஞ் சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே. (ப. இ.) செழிப்பான தாமரை இதழ் எட்டினுக்குள் அருமை மிக்க தாளுண்டு அங்கே மாறா ஆற்றலும் அருளும் மிக்க கன்னியர் எண்மருறைவர். அவர்கள் பால் தோன்றும் கலை முதல்வியர் அறுபத்து நால்வராவர் அவர்கள் அனைவரும் திருவருளாற்றலைச் சார்ந்து உண்மையுணர்ந்து திகழ்பவராவர். (அ. சி.) ஆரியத்தான் - தாமரை இதழ்கள் நடுவில் உள்ளதோர் உறுப்பு. (10) 1061 .கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசத்தி அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுட் பூசனை யாளே. (ப. இ.) ஆராய்ந்து எடுக்கப்பெற்ற சிலம்பும், வலம்புரிச் சங்கும், சக்கரமும் உடையவள். எட்டுத் திசைகளிலும் நிறைந்திருப்பவள், முதல்வி; திருவருளாற்றல்; பல்வேறு அண்டங்களையும் பல்வேறு திசைகளையும் படைத்து ஆருயிர்களுக்கு அளித்துக் காக்கும் திருவருட் செல்வி.
|