458
 

முதலாம் மழையாகவும் நிற்பள். அவளே, பண்டு தமிழ்நாட்டின் வடஎல்லையாக அமைந்த இமயமலையாகநிற்பள். இம் மலை ஆதற்கு முன் கடலின்கண் அமிழ்ந்திருந்தது. அது தென்கடற்கோளால் மேலெழுந்தது.

(அ. சி.) வடவரை - தமிழ் நாட்டின் வடக்கின்கண்ணேயுள்ள இமயம். தண் கடற்கண்ணே தண்கடலாயிருந்த இடத்தின்கண்ணே மேலே கிளம்பிய (வடவரை என்று கொள்க).

(11)

1142 .கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

(ப. இ.) நெற்றிக்கண்ணுடைய திருவருளம்மையைச் சார்ந்திருந்தவர் செந்நெறி மாண்புடையர். அவரே சிவவுலகஞ் சேர்ந்தவர், தடுமாற்றமின்றி ஒரு நிலைப்பட்டு உயர்ந்திருப்பது கண்ட உண்மையாளர். அவரே அருட்பண்புடையராவர். அவர்களும் தடுமாற்றமாகிய நடுக்கற்றிருப்பர்.

(அ. சி.) கண்ணுடையாள் - மனோன்மனி. மண்ணுடையாரை - (மண் - மாட்சிமை) திருவருட் சத்தி கலந்த மாட்சிமை உடையவரை. பண்ணுடையார் - மணி கடல் முதலிய பத்துவித நாதங்களைக் கேட்டவர். விண்ணுடையார் - முத்தியுலகை உடையவர்.

(12)

1143 .கண்டெண் டிசையுங் கலந்துவருங் கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையுந் தொழநின்ற கன்னியே.

(ப. இ.) திருவருள் எட்டுத் திசைகளிலுமுள்ள உலகுடல் கருவிகளைக் கருதியவளவானே தோற்றமுறக் கண்டு அவற்றுடன் கலந்தியக்கும் கன்னி. அவள் உலகத் தோற்றத்துக்குமுன் கருவுற்ற தாய்போல் சூலியாக நிற்பள். அப்பொழுது அவள் வனப்பாற்றல் என்று பெயர் பெறுவள். அவள் திருவடியை எண்புலத்துள்ளாரும் நறுமலர் கைக் கொண்டு திருமுறையோதித் திருத்தொண்டியற்றித் தொழுவர். அவர் தொழுகையை ஏற்றுத் துணையருள் புரிய இணையிலாக் கன்னியாக அவள் நின்றனள்.

(அ. சி.) கன்னி - நினைப்புமாத்திரையில் எல்லா உலகங்களையும் உடம்புகளையும் கருவிகளையும் போகங்களையும் ஆக்குவதால் கன்னி எனப்பட்டார்.

(13)

1144 .கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறஞ்
சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.