(ப. இ.) ஆருயிர்கட்கு மாறுபாட்டுணர்வை எழுப்புவது பாசம். அப் பாசம் இருள் என்று சொல்லப்படும். இவ் விருள் அறிவைத் தடை செய்யும். அப்பொழுது அஃது அறியாமை என்று கூறப்படும். இவ் வறியாமையினைத் திருவடியுணர்வு வெளிப்படச் சிவஒளி தோன்றி யகற்றும். அகற்றவே, அச் சிவ ஒளியால் விளக்கம் அளித்துப் பொருந்தும் திங்களையும் ஞாயிற்றினையும் ஒளிரச் செய்யும். புறவிருள் அளவுக்கு உட்பட்ட அவ் வொளிகளால் நீங்குவதுபோன்று அகவிருள் அவ்வொளிக்கும் ஒளியருளும் அளவிலாத சிவஞான ஒளியால் நீங்கும். (அ. சி.) அன்றிய - மாறுபட்ட. இருசுடர் - பெருமை பொருந்திய சுடர். துன்று - தோன்ற. (27) 1965. கடங்கடந் தோறுங் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனு மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. (ப. இ.) நிலத்தே நீர் நிரப்பிவைக்கப்பட்ட குடங்கள் பலவற்றிலும் வானத்தே காணப்பெறும் கதிரவன் தோன்றுவன். அக் கதிரவன் பல குடங்களிலும் ஒரே வடிவாய்த் தனித்தனி வெவ்வேறாகக் காணப்படுவன். அங்ஙனம் காணப்படினும் கதிரவன் ஒருவனே. குடமாகிய கடம் பலவாதல்பற்றி அவன் நிழலுரு பலபோன்று தோன்றினும் உண்மையில் கதிரவன், ஒருவனே. அக் கதிரவனைத் தாந்தாம் கண்டவாறே குடத்துள் அடக்கிவிடவேண்டுமென்று குடத்தை மூடினால் அக் கதிரவன் அக் குடத்துள் அடங்குவதுண்டோ! இல்லை; இல்லை. அதுபோல் திருநீல கண்டத்தையுடைய முழுமுதற் சிவபெருமானும் கலப்பால் எல்லா உயிருடனும் தனித்தனி வெவ்வேறாகக் காணப்படுவன். உடம்புதோறும் உயிர் தனித்தனி வெவ்வேறாம். ஆனால் அவ்வுடலகத்துக் காணப்படும் உயிர்தோறும் நீக்கமற விரவிநிற்கும் சிவபெருமான் ஒருவனே. அவன் கதிரவனைப்போல் உடம்பில் அடங்கான். அவன் உடம்பகத்தும் புறத்தும் யாங்கணும் எஞ்ஞான்றும் விரவி நிற்பன். "நீர்போலாம் ஆருயிர்கள் நீர்நிரப்பு சால்உடல்கள் ஆர்கதிர்போன் றாண்டவனு மாம்." என்பதனை நினைவுகூர்க. சால் - நீர்க்குடம். (அ. சி.) கடம் - மட்குடம். (28) 1966. தானே விரிசுடர் மூன்றுமொன் றாய்நிற்குந் தானே யயன்மா லெனநின்று தாபிக்குந் தானே யுடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாகுமே. (ப. இ .) ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றும் தனித்தனியே ஒளிதரும் ஒளிப்பொருள்கள். அவை மூன்றும் சிவபெருமான் ஒளியினைப் பெற்றே ஒளி தருகின்றன. அம் மூன்றும் ஒருபடித்தாக நிற்கின்றன. அவற்றைச் சிவபெருமானே அயன் அரியாக நின்று ஆக்கியும் நிறுத்தியும்
|