2163. கனவின் நனவுபோற் காண்டல் நனவாங் கனவினிற் கண்டு மறத்தல் கனவாங் கனவிற் சுழுத்தியுங் காணாமை காணல் அனுமாதி செய்தலி லான துரியமே. (ப. இ.) கனவின்கண் நனவுபோற் காண்பது கனவின் நனவு. கனவிற் கனவு, கண்டு மறத்தலாகும். கனவின் உறக்கம் காணாமையாகும். கனவின் பேருறக்கம் அனுமாதியாகக் காண்டல். அனுமாதி: உத்தேசம். உத்தேசம் என்பது பொருளுண்மைமட்டுங் கோடல். அஃதாவது எழுவாய்க் காட்சியினை ஒத்தல். உயிர்ப்படங்கலின்கண் அவ் வுத்தேசச் செயலுமின்றி நிற்றல். (அ. சி.) அனுமாதி - உத்தேசம். (17) 2164. சுழுத்தி நனவொன்றுந் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவதன் உண்மை சுழுத்தியிற் சுழுத்தி யறிவறி வாலே 1யழிகை சுழுத்தித் துரியமாஞ் சொல்லறும் 2பாழே. (ப. இ.) சுழுத்தியென்று சொல்லப்படும் உறக்கத்தின்கண் நனவு ஒன்றும் தோன்றாமை. உறக்கத்திற் கனவு ஆருயிரின்கண் தன் உண்மை மட்டும் தோன்றுதல். உறக்கத்தில் உறக்கம் - சுட்டுணர்வும் சிற்றுணர்வும் அழிவெய்தல். அந் நிலை முற்றுணர்வால் ஏற்படுவதாகும். முற்றுணர்வு - சிவஞானம். உறக்கத்தில் பேருறக்கம் சொற்கழிவாகிய பாழ் நிலையாகும். சொற்கழிவு - சொல்லுக்கு அடங்காதது. (18) 2165. துரிய நனவா 3மிதமுணர் 4போதந் துரியக் கனவா மகமுணர் போதந் துரியச் சுழுத்தி வியோமந் துரியந் துரியம் பரமெனத் தோன்றிடும் தானே. (ப. இ.) துரியம் என்று சொல்லப்படும் பேருறக்கத்தின்கண் நனவாவது அனைத்துயிர்க்கும் நேரக்கூடிய இன்பவாயிலாம் உறுதியினை அறியும் அறிவாகும். இதம் - உறுதி. பேருறக்கக் கனவு தன்னை யுணரும் உணர்வு ஆகும். பேருறக்க உறக்கம் அருள்வெளியாகும். பேருறக்கத்தின்கண் பேருறக்கம் தான் சிவனாய்த் தோன்றுதல். அஃதாவது சிவனிறைவில் ஒடுங்குதல். அஃது ஆடை, அணி, பூச்சு, பேச்சு முதலியவற்றால் மாறுதல் எய்திய ஒருவனை அக் கோலத்தினுக்குரிய பெயரான் அழைக்கப்பெறுவதனை யொக்கும். அக் கோலப்பெயர் சார்புபற்றிய செயற்கையே யன்றி இயற்கையாகா தென்க. (19)
(பாடம்) 1. யறிகை. 2. பாதாளம் 8. திருவெம்பாவை, 1. (பாடம்) 3. மிதமுரை. 4.இதமகி. சிவஞானசித்தியார், 2. 2 - 10.
|