2173. மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் 1தாணு மலக்கலப் பற்றான் மதியொளி யாமே. (ப. இ.) ஆருயிரும் பேருயிரும் தொன்மையே புணர்ப்பாக இருப்பினும் உயிரின் ஆற்றல் மலக்கலப்பால் மறைந்திருந்தது. அதுபோல் மலக்கலப்பாலேயே அறிவும் மறைந்திருந்தது. அறிவுக்கு அறிவாய் விளங்கும் பொற்றூணாகிய தாணுவாம் சிவனும் அம் மலக்கலப்பாலேயே மறைந்திருந்தனன். திருவருளால் மலக்கலப்பகன்றால் ஆருயிரினறிவு நிறைமதி போன்று சிறந்து விளங்கும். சிவபெருமான் பிறைசூடியருளினன் என்பது ஆருயிரின் அறிவு விளக்க விளங்குந்தன்மைத்தாகலின் அதனை அவன் தன்பால் வைத்து அதன் மதியை விளக்கியருள்கின்றனன் என்பதன் உருவகமேயாகும். இவ் வுண்மை பட்டினத்துப்பிள்ளையார் அருளும் திருவொற்றியூர் ஒருபா ஒருபது ஆறின்கண் "தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி, யாமதி யானென வமைத்தவாறே" என்னும் திருமொழியான் உணர்க. ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா. (27) 2174. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் 2றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. (ப. இ.) செய்வதறியாது திகைக்கின்ற எண்ணத்தினுள் காமம் வெகுளி மயக்கங்கள் என்னும் அரிமா மூன்றுள்ளன. அகப்புறக்கலனாகிய நெஞ்சினுள் எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் நரிக் குட்டிகள் நான்குள்ளன. அதுபோல் நெஞ்சினுள் செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் யானைகள் அஞ்சுள்ளன. இப் பகைப்பொருளாகிய அரிமா நரிமா கரிமா என்னும் பன்னிரண்டுடன் துன்னிநிற்கும். அந் நெஞ்சினுக்கு ஆடுதலும் அடங்குதலும் ஆகிய இருவகைத் தொழில்கள் உள்ளன. ஆடுதல் - பிரவிர்த்தி. அடங்குதல் - நிவிர்த்தி. இவற்றை முறையே ஓடுதல், ஒடுங்குதல் எனவும் கூறலாம். இவற்றில் ஆடுதலுக்கு அடங்குதலும் ஓடுதலுக்கு ஒடுங்குதலும் முறையே ஒவ்வோர் மாத்திரை முதலெழுத்துக்கள் குறிகிநிற்பன ஓர்க. (அ. சி.) சிங்கங்கள் மூன்று - காமம், வெகுளி, மயக்கம். நரிக்குட்டி அந்தக்கரணங்கள். ஆனைக்கன்று - பொறிகள். பால் இரண்டு - பிரவிர்த்தி, நிவிர்த்தி. (28) 2175. கதறு பதினெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும் விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் அதிர வருவதோர் ஆனையு மாமே.
1. கொங்குவார். அப்பர், 6. 24 - 4. 2. தொண்டரஞ்சு. சம்பந்தர், 2. 114 - 1.
|