1000
 

(ப. இ.) மேலோதிய முப்பதங்களின் புணர்ப்பினை விளக்க அச் சோயமாகிய இவன் அவனே என்னும் முறைப்படி அவனே இத் தேவதத்தன் என்னும் பொருளின்கண் ஏற்படும் காலமும் இடமும் செய்தியும் நீங்கப் பெற்றால் அப் பெயர்க்குரிய பொருளாகிய உடம்பு காரணமளவாக நிற்கும். அக் காரணமாயையுங் கடந்த நிலையில் தொந்தத்தசியாகிய முப்பதம் மெய்யுணர்வினைத் தரும். அதனால் ஆருயிர் அருள் அருளோன் என்னும் மூன்றும் பெறப்படும். அவ்வுயிர் அருளுடன் கூடி அருளோன் அடியிற் கலந்து முடிவிலா இன்பம் எய்தும். சோயம்: இவன் அவனே.

(அ. சி.) சோயந் தேவதத்தன் - அவனே தேவதத்தன். இடத்தாகியவை - காலம் இடம் முதலியவற்றை. உபாதானம் - மாயை.

(6)

2455. தாமத காமிய மாகித் தகுகுண
மாமல மூன்றும் அகார வுகாரத்தோடு
ஆமறு மவ்வுமவ் வாயுடன் மூன்றில்
தாமாந் துரியமுந் தொந்தத் 1தசியதே.

(ப. இ.) அமைதி ஆட்சி அழுந்தலாகிய முக்குணமும் ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலமும் நிகழ்வதும் நீங்குவதுமாகிய செயல்கள் அகர உகர மகரங்களான் ஆகும். அவ் அகர உகர மகரங்களே பத்தாய்ப் பகுத்த (2429) பாடுகளுள் மூன்றில் தாமாம் துரியம் தோன்றும், ஆணடுத் தொம்தத் அசி என்னும் பதப்பொருள் முற்றுறும்.

(7)


17. முப்பாழ்

2456. காரிய மேழ்கண் டறுமாயப் பாழ்விடக்
காரண மேழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறுஞ்
சீருப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.

(ப. இ.) மாயாகாரியமாகிய உடலும், பொறிகளும், எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு ஆகிய கலன் நான்கும், உயிர்ப்பும் என்று கூறப்படும் ஏழும் மெய்யுணர்வால் கண்டவித்துக் காரியப்பாழ் என்று பேசப்படும். இப் பாழ் ஏழும் அருளால் அகலும். காரணமாகிய பாழ் ஏழும் வருமாறு: அனைத்தையு முணர்ந்தவனாயிருக்குந் தன்மை, அனைத்திற்கும் காரணனாந்தன்மை, அனைத்திற்கும் உயிர்க்குயிராய் உள்ளுறையுந் தன்மை, அனைத்தையும் செலுத்தும் ஆணைத் தன்மை, அனைத்தையும் படைத்தல், அனைத்தையும் காத்தல், அனைத்தையும் துடைத்தல் என்பன. இவ்வேழும் அறிவுப் பாழாகும். இதுவும் அருளால் காண அகலும். காரிய காரண வருத்தங்கள் அகலவும் சிறந்த ஒழிவிலொடுக்கமாகிய உபசாந்தமும் அகலும்; இம் முப்பாழும் அகலவே பிறவி தீரும்.


1. அகார. சிவஞானபோதம், 4. 1 - 1.