(ப. இ.) ஆருயிரின் உயிர்க்குயிராய் விளங்கும் பேருயிர் முழுமுதற்சிவன். அவன் உயிர்க்குயிராய் நீக்கமற நிற்கின்றனன். அவன் என்றும் பொன்றா நிலையினனாகலின் அழிவற்றும் நிற்கின்றனன். மாறுபாடற்ற காரண உபாதியின் எதிர்மறையாகிய காரிய உபாதியின் கண்ணும் உடனாய் நின்று உற்று விளங்கும் ஆண்டவனாகவும் அவன் நிற்கின்றனன். அவனுடைய நீங்கா இயற்கைப் பேரருளாம் உபமிதியால் அல்லாமல் நடுக்கத்தைச் செய்யும் ஆணவவல்லிருள் விட்டு நீங்காது என்க. விதிரேகம். வியதிரேகம் - எதிர்மறை. வியதிரேகம் விதிரேகம் என வந்தது செய்யுட்டிரிபு. காரணோபதியின் எதிர்மறை என்று ஓதியது மாயை காரணத்தின்கண் எவ்வித மாறுபாடும் எய்தாதென்றும், காரியத்தின்கண் நிலம் மலை கடல் முதலிய பொருள்களாகத் தோன்றுவதும், அப் பொருள்கள் மண்ணும் கல்லும் நீருமாகத் தோண்டி எடுத்தல், வெட்டி எடுத்தல், முகந்து எடுத்தல் முதலியவற்றால் பிரிக்கப்படும் உறுப்புடையவாகக் காணப்படுவதும் ஆகிய மாறுதல்களும், பின் காரணத்தில் ஒடுங்குவதாகிய மாறுதலும் எய்தும் என்று உணர்த்துதற்கென்க. வியர்ப்பு என்னும் காரியப் பெயர் ஆகுபெயராய்க் காரணத்தைக் குறித்ததென்க. (அ. சி.) விதிரேகம் - எதிர்மறை. ஈண்டுக் காரிய உபாதியைக் குறிக்கின்றது. உபமிதத்தால் - கருணையினால். வீடல் - நீங்குதல். (3) 2465. காரியம் ஏழிற் கலக்கும் கடும்பசு காரணம் ஏழிற் கலக்கும் பரசிவன் காரிய காரணங் கற்பனை சொற்பதப் பாரறும் பாழில் பராபரத் தானே. (ப. இ.) முன் (2456) ஓதப்பெற்ற காரிய வருத்தம் ஏழின்கண்ணும் இருட்சார்பால் மருள் வயப்பட்டுத் துன்புறும் ஆருயிர் கலக்கும். அங்ஙனம் கலப்பதால் நீங்கா வருத்தம் எய்தும் அவ்வுயிரின் வருத்தத்தை ஒழித்தற் பொருட்டுக் காரண வருத்தம் ஏழின்கண்ணும் பரசிவன் எனப்படும் திருவருள் கலக்கும் அவ் வருள் கலந்து ஆருயிர்க்குத் துணைநின்று அவ் வுயிராலேயே அவ் வருத்தங்களை யகற்றும். இத்தகைய காரிய காரண வருத்தங்கள் வினைக்கீடாகக் கற்பிக்கப்பட்டு நிகழ்வனவாகலின் நீங்குந் தன்மைத்தாகும். ஈண்டுக் கற்பனை என்பது படைத்து மொழியும் கற்பனையன்று. திருவருள் திருவுள்ளத்தாற் கற்பிக்கும் கற்பனையாகும். கற்பனை - திருவாணை. ஏவுவார் கற்பித்தவாறே இயற்றுவார் இயற்றுவரன்றோ! அக் கற்பனை யாண்டும் பொய்யெனப்படுதற்கின்று. அதுபோன்றதாகும் ஈண்டுக் கூறும் கற்பனையும் சொல்லப்படும் அறியாமை விளையும் நிலம் அகன்ற இடம் உருவற்ற பாழென்ப. அப் பாழின்கண் திகழ்பவன் தொன்மைப் பெரும் பொருட்குத் தொன்மைப் பெரும் பொருளாம் சிவபெருமானாவன். அச் சிவபெருமான் திருவடிக் கீழ்த் தங்கும் ஆருயிர். (அ. சி.) கடும்பசு - மோகவசப்பட்டு வருந்தும் சீவன். சொற்பதப்பார் - சொல்லப்படும் அஞ்ஞானம் நிறைந்த பூமி. (4)
|