1151
 

பொருளேயாம். (2309) அவ் வுண்மை அவர் பயின்ற திருக்குறளை ஓதுங்கால் அது திருவள்ளுவப்பயன் என்ற அறிந்து விடுகின்றனர், அன்புடன் செறிந்து கேட்போர், இதுவும் ஒப்பாகும். திருவடியுணர்வால் நான் என்னும் எண்ணத்தை நானும் நினையாதொழிந்தேன். நடப்பாற்றல் - திரோதான சத்தி; ஆதி சத்தி. வனப்பாற்றல் - பராசத்தி.

(அ. சி.) நானென்றும் தானென்றும்-நான்வேறு, சிவன்வேறு என்று. இரண்டில்லை - ஒன்றும் அல்ல இரண்டும் அல்ல என்பது.

(10)

2778. ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென் றறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோன நாதாந்த வேதமே.

(ப. இ.) திருவடியுணர்வாம் நன்னெறியும், நாதாந்த முடிவாம் நன்னெறியும் என நெறி இருவகைப்படும். அவற்றுள் ஞானத்தின் நன்னெறியாவது நானென்ற முனைப்பற்றுத் திருவடியுணர்வாய் நின்று அத் திருவடியினையுணர்தல். இது நீருள் மூழ்குவான் நீருள் நின்று நீரின் தன்மையால் நீரினை யுணர்வது போன்றாகும். நாதாந்தநெறியென்பது (2615) அறிவிற் செறிவாம் ஞானயோக நெறியாகும். அதன் மேல் அறிவின் அறிவாம் ஞானத்தின் ஞானம் நன் மோன நிலையாகும். மோனம்: மேன்மை என்னும் அடியாகவுள்ளது. மேன்மை யுணர்வு மோனம் எனப்படும். அதுவே நாதமுடிவுங் கடந்த 'சிவசிவ' என்னும் நான்மறையாகும்.

(அ. சி.) நாதாந்த - நாத தத்துவங்கடந்த.

(11)

2779. உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கம் பிரணவம்
உய்யவல் லாரறி வுள்ளறி வாகுமே.

(ப. இ.) பிறப்பு இறப்பாகிய தடுமாற்றத் துன்பத்தினின்றும் விடுமாறு நினைந்து திருவருளால் உய்ய வல்லார்கட்குத் திருவடியுணர்வாகிய சிவஞானமே உயிராகும். அதுபோல் சிவவுலகு சிவனண்மை, சிவவுரு எனப்படும் நிலையினின்றும் உய்யவல்லார்க்குச் சிவ முதலே விழுப்பொருளாகும். உய்யவல்லார்கட்கு ஒடுக்கம் ஓமொழியாகும். உய்யவல்லார் அறிவு உண்மைப் பொருளாம் சிவத்தினைச் சார்ந்தமையால் மாறுதல் இல்லா உள்ளறிவாகும்.

(12)

2780. காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை 1யாகுமே.


1. ஈசனுக்கன். சிவஞானசித்தியார், 12. 2 - 20

" அன்பிலார். திருக்குறள், 72.

" ஆணமில். நாலடியார், 374.