279
 

தியானம்
(நினைதல்)

618. தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்கட்கும் தன்னிட1 மாமே.

(ப. இ.) நினைவுநிலையாகிய தியானவழியே சிவபெருமான் திருவடியிணையினைத் தவத்தால் நினைந்து அவன்றன் அருளாணைபெற்றுப் படைத்தல், காத்தல், துடைத்தல், அடைத்தல் ஆகிய நிலையினராவார்? அயன், அரி, அரன், ஆயிரங்கண்ணன் என்பவர். அடைத்தல் - அமிழ் தடைத்தல். இந் நால்வரும் முறையே ஏழ்புவனம் படைக்கவல்லார், பாற்கடல் தூங்கவல்லார், துடைத்து அசையாது நிற்கவல்லார், அடைத்து அமுதம் தாங்கவல்லாராவர். இவர்கள் நிலைகளும் கடவுள் நினைவின் வன்மையால் கிடைத்தன. தூங்கல் பாற்கடலில் துயிலுதல். வாங்கவல்லார் - மீண்டும் படைக்கவல்லார். தேங்கவல்லார் - அசையாது நிற்கவல்லார். முனிவன் (உருத்திரன்); அரன். தன்னிடம் - எண்ணிய கைகூட இடையறாது நினைக்குமிடம்.

(அ. சி.) தூங்கவல்லார் - விட்டுணு. துணை....வல்லார் - பிரமா. வலிசெய்...வல்லார் - உருத்திரன். அமுதம்...வல்லார் - இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்.

(7)

சமாதி
(நொசிப்பு)

619. காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன்2 பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

(ப. இ.) நொசிப்புநிலையாகிய சமாதியினைத் தலைப்பட்டார். மூலமலத்தின் காரியமாகிய எழுவகைத் துன்பங்களையும் நீங்கியவராவர். வினைமுதற்காரணம் ஏழும் தன்பால் எய்தியவராவர். நீண்டகாரணத் துன்ப நிலைகளைக் கெடுத்தவராவர். தவப்பேற்றால் தற்பரமாகிய சிவபெருமானைச் சார்தல் சமாதி என்ப. காரியமான உபாதி (ஏழு) மூலமலத்தின் காரியமாகிய துன்பம் ஏழு, அவை: மயக்கம், மதம், அவா, கவலை, உட்சூடு, வாட்டம், வியப்பு என்பன. காரண உபாதி - அத் துன்பத்தைப் போக்கும் வினைமுதற் காரணநிலை ஏழு - திருவருளாற்றல் ஏழு. அவை: திருவருளாற்றல், தொழிலாற்றல், அன்னை, ஆள்வி, துடைப்போள், காப்போள், படைப்போள் என்ப. வாரிய - நீண்ட காரணமாய - துன்பவாயிலாகிய ஏழும் கெட உபாதி என்பது காரணம் என்பதனோடும், ஏழென்பது காரியம் என்பதனோடும் இயைந்து நின்றன.


1. முழுத்தழன். அப்பர், 4: 113 - 5.

2. சத்தியாய். சிவஞானசித்தியார், 2: 4 - 3.

" கருணை. தாயுமானவர், 16. பன்மாலை, 2.