நியமத்தினைப் புரிந்து, சிவனை வழிபடும் அழகிய நற்றவத் தொண்டில் உறைத்து நின்று தங்களை அதற்கே ஒப்புவித்து ஓதவேண்டிய காலங்களிலெல்லாம் திருமுறைகள் ஓதிச் செய்யும் பணியில் முட்டின்றிச் செய்வா. சடங்கு - செய்யும் பணி, கரணம். அறுத்தல் - முட்டின்றிச் செய்தல். (அ. சி.) அந்தணர் - அறவோர். அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல், தவம், வேட்டல், ஈட்டல், ஈதல். (1) 76. காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. (ப. இ.) காயத்திரியாகிய உமையம்மையாரையும், ஆராயப் பெறுகின்ற சாவித்திரியாகிய நாமகளையும் வழிபட்டுப் பயன் பெறுதற்குரிய வழிவகைகளை ஆராய்தற்கு உவப்பர். அவற்றிற்குரிய மந்திரங்களையும் தூய நெஞ்சிடத்து நினைப்பர். நினைத்துப் பேரன்பாகிய காதலாக இருந்து அம் மறையே நினைவாய் உறைத்து நிற்பதால் ஏனை மாயாகாரியப் பொருள்களைச் சிறிதும் பொருந்தார். அத்தகையோரே செந்தமிழ்ச் சிவமறையோர் எனப்படுவர். (2) 77. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான கிரியை யிருந்து சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. (ப. இ.) ஓமொழியானது ஏனை மந்திரங்களின் விரிவிற்கும் அவற்றின் ஒலிப்பிற்கும் தாயாய் அமைந்தது. அதனால் அம் மறை பெருநெறியெனப்படும். அதனை அருள் வலத்தால் ஓர்ந்து, சிவகுருவின் திருவருள் நெறியால் திருவைந்தெழுத்தின் அருமறை கேட்டு, அக் கேள்வியாகிய உபதேசத்தினால் திருநெறியான திருவருளைக் கை ஏற்று நடப்பர். அத்தகையோரைச் சிவவடிவினராக அம் மறை செய்யும். அங்ஙனம் சிவவடிவானோர் குற்றமற்ற சிவமறையோராவர். இவரே தமிழகத்துப் பார்ப்பாராவர். துகள் - குற்றம். (அ. சி.) பெருநெறி - முத்தி மார்க்கம். குருநெறி - சன்மார்க்கம். (3) 78. சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்1 எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்2 ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்றுப் பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. (ப. இ.) முப்பொருள் உண்மை காண்டலாகிய திருவடியுணர்வும், சிவத்தைப் பேணுதலாகிய நற்றவமும் செந்நெறியொழுகுவார் தானவனாதலாகிய சிவவடிவிற்கு உறுப்புக்களாகும். அவ்வருந் தவத்தினை மேற்கொள்வார் ஐம்பொறியடக்குதலை முதற்கண் செய்தல் வேண்டும்.
1. நானவனென், சிவஞானபோதம், 10 - 1-1. 2. நானேயோ. 8. திருவேசறவு, 10.
|