காலம்நோக்கிப் பிரிக்கக் கருத்துக்கொள்ளும் காலனின் கருத்தின்படி சென்று பிறப்பு இறப்பு என்னும் மாறாப்பெருஞ் சுழலில் விழுவர். இத் தடுமாற்றமாகிய மயக்கத்தினின்றும் விடுபடார். நீதர்கள் - நீசர்கள்: தாழ்வானவர்கள். கன்றிய - சினந்த. கருத்துழி - கருத்தின்படி திகைப்பு - மயக்கம். (13) 844. அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்கூட வாகு மதியொளி அங்கி 1சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே. (ப. இ.) மூலத் தீயும் திங்கட் கதிரும் கலந்த இடத்துப் பகலவன் கதிரொளி விளங்கும். மூலத்தீயும் பகலவன் கதிரும் விரவிய இடத்து மதியொளி திகழும். மூலத்தீ திருவடியுணர்வோடு கலப்புறலால் விண்மீனை ஒத்த ஆவிகளின் ஒருநிலைத்தங்குதல் ஏற்படும். அந்நிலையே எல்லாம் ஆகும் நிலையாம். தாரகை - விண்மீன்; நட்சத்திரம். (14) 845. ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. (ப. இ.) பெண்கலையாகிய திங்கட்கலை பதினாறும், ஆண்கலையாகிய பகலவன் கலை பன்னிரண்டும் உயிர்ப்புப் பயிற்சியால் உடம்பை விட்டகலாமல் உடம்பினுள்ளே மூலத்தினிடம் நிற்றல் வேண்டும். அங்ஙனம் நிற்கப்பெற்றால் தெவிட்டாத திருவடியின்பம் நிலைத்த இன்பமாம். நெருப்பு - மூலத்தீ. பெய்தல் - அதன்கண் நிலைப்பித்தல். (15) 846. காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியிவ் வாறு பிழையாமற் செய்விரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. (ப. இ.) வலமூக்காகிய பருதியின்வழி இயங்கும் உயிர்ப்பை (மூச்சுக் காற்றை) இடமூக்கின்வழி வாங்கியும், இடமூக்காகிய திங்களின் வழி இயங்கும் உயிர்ப்பை வலமூக்கின் வழி வாங்கியும், இம்முறையாக அம் மூச்சைத் தவறுதலில்லாது பழகி வந்தால், அளவில்லாத ஆண்டுகள் ஆணியாகிய உயிர் உரனுடன் அவ்வுடலில் வாழும். (அ. சி.) பருதி - பிங்கலை. மதி - இடகலை. ஆணி - சீவன். (16) 847. பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
(பாடம்) 1. சிவத்தினிற்.
|