(ப. இ.) விந்து முதலாகக் கூறப்படும் எழுத்துக்களெல்லாம் நாதம் உள்ளிருந்து ஒலிப்பிக்க ஒலிக்கும். அவ்வம்மனைக்குரிய எழுத்துக்கள்வரின் ஆங்கு நிற்கும். அதன்பின் தாரகை என்னும் நாள்கள் நிற்கும். மூலமுதல் நிலைகள் ஆறினுக்கும் மனைகள் இவ்விரண்டாகும். நாள்கள் (நட்சத்திரம்) நாலரையாகும். இவ்விரண்டு - இரண்டிரண்டு. (அ. சி.) விந்து என்று உள்ள - விந்து என்று சொல்லப்படுகின்ற குறி எழுத்து எல்லாம். நாதமும் ஓங்கும் - நாதமும் கூடி எழும். அப்பதி - அந்தந்த இராசி மண்டலம். அவ்வெழுத்தே வரில் - அது அதற்குரிய எழுத்துக்களே வரில். தாரகை - நட்சத்திரங்களாம். ஆதாரம் ஒவ்வொன்றினுக்கும் இராசி இரண்டு நட்சத்திரம் 4 1/2 ஆக இராசி 12 நட்சத்திரம் 27. (17) 1248. தாரகை யாகச் சமைந்தது சக்கரந் தாரகை மேலோர் தழைத்தது பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே. (ப. இ.) சக்கரம் நட்சத்திர வடிவமாகச் சமைந்தது. அந் நட்சத்திரங்களுக்கு ஒளிகொடுத்துக்கொண்டு செழித்த சிவ ஒளி மேலாக நிற்கின்றது. இந் நட்சத்திரச் சக்கரத்தில் சந்திரனும் சூரியனும் வர, நட்சத்திர வடிவமான எழுத்து முறையாகக் காணப்பட்டது. (அ. சி.) பேரொளி - சிவ ஒளி. தாரகை கண்டது - நட்சத்திர வடிவமான அக்கரம் காணப்பட்டது. (18) 1249. கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங் கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தன வொத்தபின் கண்டிடு மப்புறங் காரொளி யானதே. (ப. இ.) காணப்படும் நட்சத்திர சக்கரங்கள் விந்துவினால் உண்டாவதாம். அவ் விந்துவின் மேல் நாதமும் தோன்றும். அந் நாதத்தின் மேல் அழல் வண்ணமாகிய சிவ ஒளி தோன்றும். இவை அனைத்தும் ஒத்தபின் செம்மேனி எம்மானின் ஒரு பங்காகிய அம்மையின் காரொளி தோன்றும். இவ் வொளி எல்லாவற்றையும் இயக்கும். (அ. சி.) கண்டிடு சக்கரம் - இவ்வாறு காணப்பட்ட தாரகைச் சக்கரம். வன்னிக்கொழுந்து - ஒளிச்சுடர். காரொளி - சத்தி ஒளி. (19) 1250. காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்தபின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
|