1756. காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயவவ் வாறா றடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள்தந்த நந்திக்கென் 1சொல்வதே. (ப. இ.) ஆருயிர்கள் கடல்போல் எல்லையின்றி வரும் பிறப்புக்களில் உழன்று ஒவ்வொரு நாளும் நாபியாகிய கொப்பூழின்கண் உயிர்ப் பொன்றுடன், பேருறக்கமாகிய துரியநிலையினை எய்தும். அந்நிலையினில் மிக விரிந்த ஆவி குவிந்து அடங்கிநிற்கும். இது கேவலமாகிய புலம்புடன் ஒக்கும். பின் நெற்றிக்கண் முப்பத்தாறு மெய்களானுமாகிய பருவுடல், நுண்உடல், பண்புடல், போர்வையுடல், முதலுடல் என்னும் ஐவகையுடல்களுடனும் முப்பத்தைந்து கருவிகளுடனும் புணர்வினை எய்தும். இவற்றினுழன்று செவ்விவாய்ந் தோர்க்கு அருள் தந்த தூய்மையுண்டாகும். இத் தூய்மையாவது மாயா காரியங்களின் உண்மையுணர்ந்து அவற்றின் கண் பற்றின்றி ஆண்டான்கண் பற்று வைத்து ஒழுகுதல். (அ. சி.) காயப் பரப்பு - அளவில்லாத பிறப்பு. துரியம் - கேவல துரியம். சகலம் - அஞ்சு அவத்தையோடுங் கூடிய நிலை. ஆறாறு - 36 தத்துவங்கள். (10) 1757. நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென வூனுயிர் என்ன வுடனின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென 2இன்பந் திளைக்கின்ற வாறே. (ப. இ.) ஆண்டவனும் ஆருயிரும் தன்மை முன்னிலைகளால் பெறப்படும் நான் நீ என்பனபோன்று (கடவுளும் உயிரும்) பிரிந்து தோன்றும் பொருள்கள் அல்ல. பின் எவ்வாறு நண்ணி நிற்பதெனின் உடலுயிர்போல் கலப்பால் ஒன்றாய் நிற்பன். வானம் ஏனைய பூதங்களுடன் உடனின்று இயக்குவதுபோல் உடனாய் நின்றருள்வன். வானவர்கள் தொலைவிலகல மனிதர்கள் சிவபெருமான் திருவடியில் தலைக்கூடி அத் திருவடியின்பத்தேன் நுகர்வர். அந் நிலை ஒருசார் பொருள் தன்மையால் வேறாம். இத்தகைய முப்புணர்ப்பால் இன்பந்துய்த்துக் களிக்கின்றவாறாகும். (அ. சி.) ஊன் உயிரென்ன - உடலும் உயிரும்போல. வானென - ஆகாயம் எல்லாப் பூதங்களிலும் கலந்திருத்தல் போல. (11) 1758. அவனும் அவனும் அவனை யிறியார் அவனை யறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை யறியில் அவனும் அவனும் அவனிவ னாமே.
1. கேவல. சிவஞானசித்தியார், 4. 3 - 5. 2. நானேயோ. 8. திருவேசறவு, 10. " கட்டுமுறுப்பும். சிவஞானபோதம், 2. 1 - 1.
|