693
 

(அ. சி.) பெருந்தன்மை - சிவபிரான். யான் - சீவன். உமைமெய்யே திருந்த - சிற்சத்தியே உடலாக: முன் - அநாதியில்; அஃதாவது படைப்புக்கு முந்திய காலத்தில்.

(14)


9. திருவருள் வைப்பு

1761. இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

(ப. இ.) ஆருயிர்கட்கு இரு நிலையாவது அறியாமையாகிய இரவும், அறிவாகிய பகலும் என்ப. ஆருயிர்க்கு மாயாகாரிய உடலிருப்பது போன்று திருவருளுக்கு ஆருயிர் உடலாக இருக்கின்றது. அருளென்பது அன்பியலில் அறமும், அருளியலில் தவமுமாகும். பொருளாவது நீருள் வெப்பம்போல் திருவருள் உள்நின்ற சிவனாகும். பொருளென்பது ஆருயிர் நுகர்வாம் பேரின்பம். அதுவே சிவபோகம். பொருள் அழிவில் மெய்ப் பொருள்.

(அ. சி.) இரவும் பகலும் - அஞ்ஞானமும் ஞானமும். போகம் - சிவபோகம்.

(1)

1762. காண்டற் கரியன் கருத்திலன் நந்தியுந்
தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யானெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.

(ப. இ.) நந்தியாகிய சிவன் ஆருயிரின் சுட்டறிவால் காண்டற் கரியன்; சிற்றறிவால் கருதற்கும் அரியன். அவன் திருவடியுணர்வு கைவரப்பெறாதாரால் தொடுதற்கும் தோய்தற்கும் ஒண்ணாத நெடுந் தொலைவிலுள்ளான்போன்று தோன்றுவன். அவன் திருவருளை வேண்டி வேறு நினைப்பின்றிச் சிவத்தைப் பேணலாகிய தவத்தைச் செய்யும் செந்நெறியாளர்க்கு உள்ளுணர்வொளியாகிய திருவடியுணர்வு கைவரும். அவ்வுணர்வுடையார் நெஞ்சத்து விளங்கும் அச் சிவஞானத்தால் தொன்மை ஆணவ வல்லிருள் அற்றொழியும்.

(அ. சி.) விளக்கு ஒளி - விளக்குகின்ற ஞானம்.

(2)

1763. குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும்1 நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.


1. காலையிற். (பதிகம் முழுவதும்) அப்பர், 4. 64 - 2.