(ப. இ.) சிவபெருமான் எல்லாவற்றிற்கும் வினைமுதற் காரணமாய் நின்று தோற்றுவித்தலும், அரனாய் நின்று ஒடுக்குவித்தலும் செய்தருள்கின்றனன். ஆருயிர் உடலகத்து அவற்றின் நெஞ்சத் தாமரைகளைச் சிறந்த இருக்கையாகக் கொண்டு நிறைந்து அங்கங்கே நின்றனன். திருவருட் பேரொளிப் பிழம்பாய் யாண்டும் குவிதலில்லாத ஒரு தன்மையாய் நின்றனன். மேலும் அதன்கண் எவர்க்கும் முறை செய்தலிற்றப்பாத நீதியுமாய் என்றும் ஒரு பெற்றியனுமாய் நின்றனன். (அ. சி.) வேதியுமாய் - ஓமத்தானமாய் (Solar Plexus); இது உடலில் மணி பூரகத்தானம்; உந்திக் கமலத்து நேர். ஆதியுமாய் - உற்பத்திக்குக் காரணமாய். ஆர்ந்து இருந்தார் - உணர்ந்து, ஓமத்தானத்தினின்றும் கிளம்பும் ஒளியைக்கொண்டு பிரகாசிப்பவர்களுக்கு. (14) 15. கோது குலாவிய கொன்றைக் குழற்சடை மாது குலாவிய வாள்நுதல் பாகனை யாது குலாவி அமரருந் தேவருங் கோது குலாவிக் குணம்பயில் வாரே. (ப. இ.) சீராட்டுப் பொருந்திய கொன்றை மலர் மாலையணிந்த குழற் சடையினையுடைய சிவபெருமான் அழகு விளங்குகின்ற ஒளிசேர் நெற்றியினையுடைய உமையம்மையாரை ஒருபாகத்தே உள்ளவன். அமரர்களும் தேவர்களும் தங்களுக்கு யாது வேண்டுமானாலும் அச் சிவபிரானுடைய குணங்களைப் பரவி வழுத்துவார் என்க. கோதுகுலம் - சீராட்டு. (அ. சி.) கோது குலாவிய கொன்றை - வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை. மாது - விருப்பம். மாது குலாவிய - கண்டார் விரும்புந் தன்மையையுடைய. யாது - துன்பம். கோது குலாவி - குற்றத்தை நீக்கி. கோது - குற்றம். குலாவு - வளை, நீக்கு. (15) 16. காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் ஆயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. (ப. இ.) காயம் இரண்டு ஆருயிர்கட்கு உள்ளன. ஒன்று விரும்பத் தகுந்து தூய மாயையினின்றும் தரப்படும் சிவவுலக அருவுடம்பு. இது வெங்காயம் எனப்படும். மற்றொன்று தூவா மாயையினின்றும் தரப்படும் உரு உடம்பு. இது பெருங்காயம் எனப்படும். இவ்விருவேறு மாறுபட்ட உடல்களும் கலந்திருப்பினும், கூட்டுப் பொருள்களோடாகிய கத்தூரி மணம் மிகுதல்போல் தூமாயை அருவுடம்பின் குணமாகிய மணம் மிக்குத் தோன்றும். அவ்விடத்துத் தேசங்களாகிய அனைத்துலகையும் கடந்து நின்றதொரு முழுமுதற் றெய்வம் சிவபெருமான் என்று எண்ணின் உண்டாம் அவன் உறவுக்கு ஒப்பில்லையாகும். (அ. சி.)காயம் இரண்டும் - வெங்காயம் பெருங்காயம் ஆக இரண்டும். மாயம் கத்தூரி - கறுத்த கத்தூரி. (16)
|