(அ. சி.) வடக்கு வடக்கு என்பர் - வடக்கே யுள்ள காசி காசி என்பர். வடக்கில்.......கே - வடக்கே உள்ள 'காசி' என்ற இரண்டு எழுத்திலுள்ள பொருள் அறிவுடையோர்க்கு அகத்தினில் "சி" என்ற எழுத்தைக் "கா" என்று பொருள்படும். Vide "சி எழுத்தொன்றைச் சிந்தையில் இருத்த." சிற்றம்பல நாடிகள். (4) 2033. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி 1யாரே. (ப. இ.) மேலோதிய திருப்பாட்டின் விளக்கம்போன்று எழுந்தது இத் திருப்பாட்டு. ஆருயிர்களைக் காயத்துள் வினைக்கீடாகச் சேர்த்து வைப்பவன் சிவன். அக் காயமே சிவபெருமானுக்குரிய இயற்கைத் திருக்கோவிலாகும். அதனையே திருக்கோவிலாக நாடுகின்றவன் சிவன். அக் காயமாகிய உடம்பினுள் சிவமணம் கமழ வீற்றிருந்தருள்பவன் சிவன். அவனே நந்தி என்று அழைக்கப்படுவன். இம் மெய்ம்மையினை மேற்கொள்ளாது காசி காசியென்று கால்கடுத்தோடி எங்குந் தேடித் திரிவாராவர். இவர்கள்தாம் சிவபெருமான் ஆண் பெண்ணாக இணைந்து வாழும் உயிர்சேர் உடம்புகள்தோறும் வீற்றிருக்கும் அருள்தோற்றக் கருத்தறியாதவராவர். (அ. சி.) காயக் குழப்பன் - ஆன்மாவைச் சரீரத்தோடு சேர்ப்பவன். காய நன்னாடன் - காயமே கோயிலாகக் கொண்டவன். கமழ்கின்ற - விளங்குகின்ற. காயத்து உள் - உள்ளத்தினுள்ளே. (5) 2034. கண்காணி யாகவே கையகத் தேயெழுங் கண்காணி யாகக் கருத்து ளிருந்திடுங் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யுங் கண்காணி யாகிய காதலன் தானே. (ப. இ.) ஆருயிர்களின் உணர்வுக்கருத்தாம் கண்ணைச் சிறந்த இருப்பிடமாகக்கொண்டு வீற்றிருந்தருளும் மெய்க்காதலனாம் சிவபெருமான் நேரே காணும்படியாக நானெறியொழுக்கத்தில் கையகத்தே வந்து தோன்றியருள்வன். அதுபோன்றே கருத்தினுள்ளும் இருந்திடுவன். அதுபோன்றே உடன்கலந்து செந்நெறிச் செலுத்தித் திருவடிப்பெரும் பேற்றினுக்கு ஒருவர் வழிகாட்டியுமருள்வன். (அ. சி.) கண்காணியாக - நேருக்கு நேராக. காதலன் - சிவன். (6) 2035. கன்னி யொருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவஞ் செய்வோர் ஒருசிறை தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்பறி 2யாரே.
1. கானநாடு. அப்பர், 5. 96 - 6. 2. இன்னிசை. 8. திருப்பள்ளி எழுச்சி. 4.
|