(ப. இ.) வழிகள் ஆறு முடிபினை உடையன. அவை: எழுத்து, சொல், மறை, தத்துவமாகிய மெய்கள் (உடல்) உலகம், கலைகள் என்று சொல்லப்படும். முற்கூறிய மூன்றும் சொல்லுலகு என்றும், பிற்கூறிய மூன்றும் பொருள் உலகு என்றும் கூறப்படும். இவ்வழிகளின் நடுவாய்த் திகழும் மெய்ப்பொருள் சிவபெருமான். அச் சிவத்துடன் கூடினால் பதினெட்டும் கூடினார் வழியொழுகும். கூடுதல் இடையறாது திருவைந்தெழுத்தினை எண்ணுதல். சொல்லப்படும் கலைகள் ஐந்து. அவை வருமாறு: நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்பன. பதினெட்டு என்பன: வளிபத்தும், நுண்ணுடம்பு எட்டும் ஆகும். இவற்றுடன் நன்றாக ஊறிக்கலந்து புடை பெயரும் என்க. அவ்வுடம்பினையே உயிருடம்பென எண்ணுமின். (அ. சி.) ஆறு - அத்துவாக்கள் ஆறு. நடு - சிவம். மூவாறும் - கலைகள் பதினெட்டும் (பத்து வாயு + புரி அட்டகம்). (8) 2091. மெய்யினில் தூல மிகுத்த முகத்தையும் பொய்யினிற் சூக்கம் பொருந்தும் உடலையுங் கையினில் துல்லியங் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் 1உடம்பே. (ப. இ.) புறந்தோன்றும்படி பொருந்தியுள்ள பருமை மிக்க பருவுடலையும், அகத்தே ஊன்றி உன்னும்படி யமைந்த நுண்ணுடலையும், உழைப்புக்கு விளக்கந்தரும் முதலுடலையும் தருதற்குக் காரணமாயுள்ள மாமாயையின்கண் சிவபிரான் ஒடுக்குவன். அம்மாமாயையுடம்பு சிவபெருமான் திருவடிக்கீழ் ஒடுங்கும். முதலுடம்பு - காரணவுடம்பு. உடம்பு - மாமாயை. முகத்தையும் - பொருத்தத்தையும். (அ. சி.) மெய் - தூலசரீரம். பொய் - சூக்குமசரீரம். துல்லியங் காட்டுமுடல் - அதி சூக்குமம் அல்லது காரணம். ஐயன் அடிக்குள் அடங்கும். உடம்பு - சிவத்தில் அடங்கும் மகாகாரண உடம்பு. (9) 2092. காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போற் சேய விடமண்மை செல்லவும் வல்லது காயத் துகிற்போர்வை யொன்றுவிட் டாங்கொன்றிட்டு ஏயு மவரென்ன ஏய்ந்திடுங் 2காயமே. (ப. இ.) பகைவரைக் காயும் தன்மை வாய்ந்த பாய்மாவாகிய குதிரை அண்மை இடத்தில் மட்டுமல்லாமல் மிகவும் தொலைவான இடத்துக்கும் மிகுந்த விரைவில் செல்லவும் வன்மையுடையதாகும். அதுபோல் ஆருயிரும் தன்னை மூடியிருக்கும் துகிலால் ஆகிய போர்வையைப் போன்றுள்ள உடம்பை வினைக்கீடாக ஒன்றுவிட்டு ஒன்றுபற்றிப் பிறக்கும். துகிற்போர்வை பழுதுற்றால் அதனை நீக்கிவிட்டு மற்றோர் போர்வையினை எடுத்துக்கொள்ளுதல் ஈண்டு ஒப்பாகும். (அ. சி.) இது, உயிர் பல அண்டங்களில் பல பிறவிகளை வெகு விரைவாக எடுக்கும் என்றது. (10)
1. தத்துவ. சிவஞானசித்தியார், 2. 3 - 22. 2. கண்ட. சிவஞானபோதம், 2. 3 - 1.
|