எனலு மொன்று. குடர் - ஈண்டுக் கருப்பை. பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ விழையும் செந்நெறியினர்க்கு ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, நாற்காலின, நிலைத்திணையன, மக்கள், தேவர் ஆகிய எழுவகைப் பிறப்பும் துன்பமேயாம். அதனால் அவ் வேழினையும் அள்ளலெனக் கூறுதலுமொன்று. (அ. சி.) மடல்விரி கொன்றையன் மாயன் - மாயையை உடைய சிவன். இடர் படர்ந்து - துன்பப்பட்டு. ஏழாநரகிற் கிடப்பர் - கருப்பத்தில் கிடப்பர். (23) 210. குடையுங்1 குதிரையுங் கொற்றவா ளுங்கொண்டு இடையுமக் காலம் இருந்து நடுவே புடையு மனிதனார் போகும்அப் போதே அடையும் இடம்வலம் ஆருயி ராமே. (ப. இ.) வேந்தர் தமக்குச் சிறந்த அடையாளமாகிய கொற்றக்குடையும் நற்றிறப் பரியும், வெற்றிவாளுங் கொண்டு பலர்சூழச் சுற்றித் திரிவர். பலர்நடுவே வெற்றியுடன் வீற்றிருப்பர். அத்தகைய வேந்தராகிய மாந்தர் இறக்குங் காலத்து அவர்தம் உயிர்ப்பு இடம் வலம்மாறிச் செல்லும். குடையும் குதிரையும் கொற்றவாளும் ஒருபுடையொப்பாக முறையே குடிகளது இன்பமும் பொருளும் அறமும் ஆகும். (அ. சி.) ஆருயிர் - பிராண வாயு. இடம் வலம் அடையும் - இடமும் வலமும் மாறுதல் அடையும். (24) 211. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பால்துளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன்2 புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. (ப. இ.) ஐம்பூதக் கூட்டரவாகிய உடலகத்தினின்று ஆருயிர் புடை பெயர்தலாகிய கூத்தினை வினைக்கீடாக நாளும் புரிகின்றன. அவ்வுயிர் உடம்பாகிய தோற்பையுள் நின்று செய்ய வேண்டிய தொழில்களை முற்றாகச் செய்து முடித்ததும் நீங்கிவிடும். நீங்கவே உண்டு நீக்கிய வாழை இலைபோன்று அவ் வுடலும் தூயதல்லாததாகிவிடும். அவ்வுடலைப் பல்லோர் புகழுமாறு பாராட்டுதல் முதலிய சிறப்பினைச் செய்து நல்லடக்கம் புரிந்தால்தான் என்ன? பலர் பழிக்கும்படி வாளா புறத்துப் போகட்டால்தான் என்ன? காக்கை கொத்தினால்தான் என்ன? அவ்வுடலை நல்லடக்கம் செய்வது நம்முடைய நனிநாகரிக நற்பண்பைக் காட்டும். செய்யாமல் விடுவது தீப்பண்பையே காட்டும். ஊட்டும் கூத்தன் வினைப் பயனை நுகர்வித்துக் காக்கும் உயிர்க்குயிராகிய இறைவன் என்றலும் ஒன்று. (அ. சி.) தோற்பை - உடல். கூத்தன் - உயிருடன் கூடிய இறைவன். (25)
1.நளியிரு புறநானூறு. 35. 2.நார்த்தொடுத். நாலடியார், 26.
|