915
 

2261. புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியுஞ் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாமவ் வவத்தையே.

(ப. இ.) ஆளாகிய புருடனுடன் சித்த முதலியவற்றைத் தொழிற்படுத்தும் தூமாயை மெய்கள் ஐந்துங்கூடி ஆறாகும். இவ்வாறும் அப்பால் நிலையென்று சொல்லப்படும் துரியாதீதத்தின்கண் தொழிற்படும். இவை மிக நுண்மையவாதலின் அருவமெனப்பட்டன. தூவாமாயை ஏழும் தூமாயைக் கண் உள்ள ஆசான்மெய் ஒன்றும் ஆக எட்டும் மேல் உறக்கத்தின்கண் தொழிற்படும். தூமாயை மெய்கள் ஐந்தும் தூவாமாயை மெய்கள் ஆறும் ஆகிய பதினொன்றும் மேல்நிலைப்பாட்டிற்கு உள்ளன. மேல்நிலைப்பாடு - பராவத்தை.

(2)

2262. காட்டும் பதினொன்றுங் கைகலந் தாலுடல்
நாட்டி யழுத்திடின் நந்தியல் லாலில்லை
ஆட்டஞ்செய் யாத வதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலு மாகுமே.

(ப. இ.) மேலோதிய பதினொன்றும் ஆருயிர்க்கு வந்துகூடினால் நுண்உடல் பருவுடல்கள் உண்டாம். திருவருளால் நன்றாக நாடி அறியின் நந்தியாகிய சிவபெருமானை அல்லது நிலைத்த சார்பு பிறிது இல்லை. அந்நிலை எய்தினார்க்குக் கருவிகள் ஆட்டஞ் செய்தலாகிய தொழிற்பாடுகள் புரியா. அது முறைமையாகும். உறுதியாக நந்தியெங்கடவுள் உன்னைத் திருவடிக்கண் அணைத்துக் கொள்வன். இதனை நினைப்பது ஆருயிர்க்குப் பேரின்பம் ஆகும்.

(அ. சி.) அழுத்திடின் - நிலைபெற்று நின்றால். ஆட்டம் செய்யாத - ஆடாத.

(3)

கலவு செலவு

2263. கேவலந் தன்னிற் கலவச் சகலத்தின்
மேவுஞ் செலவு விடவரு நீக்கத்துப்
பாவுந் தனைக்காண்டன் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்திற் 1சுத்தமே.

(ப. இ.) ஆருயிர் கருவிகளுடன் கூடாத நிலையில் புலம்பாகிய கேவலமாகும். காவலனாகிய சிவபெருமான் மாயாகாரியக் கருவிகளைப் படைத்தளித்தருளியபோது ஆருயிர் அதன்கட் செல்லும். அச் செலவினால் அவ்வுயிர் புணர்வாகிய சகல நிலையினை எய்தும். திருவருளால் இப் புணர்வு நிலையினைக் கருத்தால் துறந்துவிட்ட இடத்துப் புரிவாகிய சுத்தநிலையுண்டாம். இந் நிலையே நனவினெய்தும் அப்பால் நிலையாகும். இவற்றுடன் விரவிநிற்கும் தன்னை ஆருயிர் அருளால் இவற்றிற்கு வேறு எனக் காண்பது உயிர்க் காட்சியாகும். ஏழிற்பரை சிவபெருமானுக்கு வடிவமாம் எனக் காண்டல் அருட்காட்சியாகும்.


1. சாக்கிரத்தே. சிவஞானசித்தியார், 8. 2 - 25.