ஊமை எனப்பெறுவர். ஈது அதற்கு ஒப்பாகும். புக்கவர் மீளாப் பெருநிலை - திருவடிநிலை ஊமைக்கிணறு எனப்பட்டது. புறம்செல்லும் வாயில்லாத் தசும்பு ஊமைத் தசும்பு. தசும்பு - பெருங்கலம். எனவே மெய்யடியார் மீளா ஆளாய்க் குறுகும் கொய்ம்மலர்ச் சேவடியிணைகள் ஈண்டு ஊமைக்கிணறு என உருவகிக்கப்பெற்றன. அந் நிலை ஐந்துறுப்பும் அடக்கும் ஆமை ஐந்தென்னும் எண்ணைக் குறிப்பானுணர்த்தும் நெறிப்பாடுடையதாயிற்று. எனவே தூயநிலைக்கண்ணும் ஐவகை நிலைகள் உள. அவை: தூய நனா, தூய கனா, தூய வுறக்கம், தூய பேருறக்கம், தூய உயிர்ப்படங்கல் என்பன. இவ் வைந்து நிலைகளிலும் நிகழும் உணர்வுகளும் ஐந்தென்ப. இவ் வுணர்வை 'அழுவைகள் ஐந்துள' என ஓதினர். இந் நெறியின்கண் நிற்கும் ஆருயிர் மெய்ப்பொருளாகிய சிவபெருமான் திருவடியில் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கினால் நெடுநாள் உயிர்வாழும் ஆமையினும் மேலாக அவ்வுயிர் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அருளால் வாழும். இதற்கு எடுத்துக் காட்டு நம் திருமூலநாயனாராவர். அவ் வுண்மை வருமாறு: "முன்னியஅப் பொருண்மாலைத் தமிழ்மூவா யிரஞ்சாத்தி மன்னியமூ வாயிரத்தாண் டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து சென்னிமதி அணிந்தார்தந் திருவருளால் திருக்கயிலை தன்னிலணைந் தொருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்." (12. திருமூலர், 27.) (அ. சி.) ஊமைக் கிணறு - நின்மல அவத்தை. ஆமை - நின்மல அவத்தையின் பேதமான நனவு முதலிய ஐந்து. அழுவை - அவ்வவத்தைகளில் நிகழும் அனுபவங்கள். ஆமையின் மேலும்-ஆமை வயதுக்கு மேற்பட்ட (ஆமை நெடுநாள் உயிருடன் இருக்கும்.) (1) 2266. காலங்கி நீர்பூக் கலந்த ஆ காயம் மாலங்கி யீசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே. (ப. இ.) பெரும்பூதங்கள் ஐந்தென்ப. அவை முறையே நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று). நீள்விசும்பு என்ப. இவற்றை இயைந்தியக்கும் கடவுளரும் ஐவராவர். அவர் முறையே அயன், அரி, அரன், ஆன்டான், அருளோன் என்ப. அங்கி - அரன்; தீ. இவ் வைம்பூதங்களுள் விசும்பாகிய ஆகாயம் ஏனைய நான்கு பூதங்களும் இயங்குமாறு இடமளித்து அவற்றின்மேல் விரிந்தும் நிற்கின்றது. இக் கடவுளர் உயிரினத்தவரேயாவர். இவர்களை இயக்கும் காரணக்கடவுளரும் ஐவகையராவர். அவர்களையே மேலஞ்சும் என ஓதினர். அக் காரணக் கடவுளர்மாட்டுச் சென்று கலக்கவல்லார்களுக்கு உயிரைக் கூறுபடுத்திக் கொண்டு செல்லும் காலனும் வரமாட்டான். அவர்களுக்குச் சிவன்பாற் செல்லும் கருத்தன்றிப் பிறிது எக் கருத்தும் இன்றென்ப. முற்கூறும் ஐவரும் மூலம்முதலாகச் சொல்லப்படும் இடங்களில் வைத்து வழிபடப் பெறும் சார்புக்கடவுளராவர். சார்பு - ஆதாரம் மேலஞ்சுகடவுளர் சார்பிலராகிய கடவுளராவர். சார்பின்மை - நிராதாரம். 1. குறிகள். சிவஞானசித்தியார். 2. 3 - 18.
|