7. அடி தலை யறியும் திறங்கூறல் 2386 .காலுந் தலையும் அறியார் கலதிகள் காலந்தச் சத்தி யருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்டவீ 1டாகுமே. (ப. இ.) காலாகிய வழியும் தலையாகிய சிரமும் உண்மை நூற் கல்வியில்லாதார் உணரார். அவர்கள் கலதிகளாகிய வீணர்களாவர். கால் என்பது சிறப்பித்துச் சொல்லப்படும் சத்தியாகிய திருவருள் என்பர். அனைத்திற்கும் வினைமுதற்காரணமாக என்றும் இயற்கையாகவே திகழ்பவன் சிவபெருமான். அவனே திருவடியுணர்வாகிய சிவஞானமாவன். அவனே திருவருட்பண்பு எட்டும் நிரம்பிய தலைவனாவன். ஆருயிர்க்குக்காலாகிய திருவருள் அச் சிவஞானத்தைக் காட்டியருளும். காட்டியருள அவ்வுயிர் திருவடிப்பேறாகிய வீடெய்தும். சிரம் என்பதிலுள்ள சிகரமும், வழி என்பதிலுள்ள வகரமும்கூடச் சிவ என்றாகும். அது சிவ என்னும் செந்தமிழ்ப் பொருண்மறையாகும். மேலும் "பரையுயிரில் யான் எனதென்றற நின்றதடியாகும்." என்றும், "உரையிறந்த சுகமதுவே முடியாகு" மென்றும் தமிழாகமம் ஓதியருள்வதால் இவையிரண்டும் முறையே வழியும் சிறப்புப்பேறும் ஆகும். இவற்றை யுணராதாரையே தலைகால் தெரியாதலையும் தடுமாற்றத்தவராவர் என்ப. (அ. சி.) கால் - தமிழ்மொழியில் கால் என்ற இலக்கத்தைக் குறிப்பது வ என்ற குறி. அஞ்செழுத்தில் வ அருளைக் குறிக்கும். தலை - ஞானம். இது "கால் அந்தச் சத்தி அருள் ஞானமே பண்பார் தலை" என்று இம் மந்திரத்திலேயே கூறப்பட்டிருப்பது காண்க. (1) 2387. தலையடி யாவ தறியார் காயத்தில் தலையடி யுச்சியில் உள்ளது மூலந் தலையடி யான அறிவை யறிந்தோர் தலையடி யாகவே தானிருந் தாரே (ப. இ.) ஆருயிரின் உடம்பகத்துத் தலை உச்சியிலுள்ளது. அடி என்பது வழியாகவுள்ளது. இவ் வுண்மையினை அருளால் அறியார். தலையடி என்பது 'சிவ' என்னும் செந்தமிழ்ப் பெருமறையாகும். இவ்வறிவை அறிந்தோர் சிவமாகவேயிருந்து இன்புறுவர். (அ. சி.) அடியாவது - பிண்ட உற்பத்தியில் முதலாவது, தலைஅடி உச்சி - தலையில் உச்சிக்கு நேர்கீழாக, மூலம் - ஆன்மா. (2) 2388. நின்றான் நிலமுழு தண்டமும் மேலுற அன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி தன்றா ளிணையென் தலைமிசை யானதே.
1.பரையுயிரில். உண்மைநெறி விளக்கம், 4.
|