974
 

ஒருவனே; வேறொருவரும் இலர். அச் செம்பொருளாகிய சிவபெருமான் சினம் பகை முதலிய எவ்வகைக் குற்றமும் தனக்கு எய்துதலின்றிச் சொல்லுதற்கரிய பேரருளுடன் செய்தருள்கின்றனன். அவன் செய்தருளம் அருளிப்பாடு நடுவுநிலைமைவாய்ந்ததாகவுள்ளது. வினைக்கீடாக வரும் துன்பம் நோய்க்குத் தரும் மருந்து போன்று இன்றியமையாது கொடுக்கத்தக்க தொன்றேயாம்.

(அ. சி.) பேணிய - காக்கும்பொருட்டு. நாற்றம் - கன்ம வாசனை. பற்றைய - பற்றாக உள்ள, செற்றம் - சினம்.

(10)

8. முக்குற்றம்

2396. மூன்றுள குற்ற முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறன்றே.

(ப. இ.) ஆருயிர்க்கு மீண்டும் மீண்டும் பிறப்பினைத் தரக்கூடிய குற்றம் மூன்று. அவை, 'காமம் வெகுளி மயக்கம்' என்பன. இக் குற்றங்கள் மூன்றும் நம்மை முற்றாகத் துன்பப்படுத்துவன. இம் மூன்றன் வயப்பட்ட உயிர்கள் இருட்சார்பாம் மருளால் மயங்கிக்கிடந்தன. மருளால் - மாயையால். அம் மருள் நீங்காமையால் ஆருயிர்கள் ஆணவ வல்லிருளின்கண் புல்லிக்கிடந்தன. திருவருளால் இம் மூன்றுக்கும் உட்படாமல் நீங்கினவர் பிறப்பு இறப்புக்களினின்றும் நீங்கினோராவர். திருவடியின்பப் பெருவாழ்வு பெற்றோரும் ஆவர். அக் குற்றங்களினின்றும் நீங்காதவர் பிறப்பின் துன்பத்தையும் இறப்பின் துன்பத்தையும் இடையறாது நுகர்வோராவர். மூன்றினால் வரும் வினைக்கு ஈடாய் அமையப்பெற்றுக் கணக்கிலாத துன்பங்கள் வந்து முடியும்.

(அ. சி.) முழுது நலிவன - நன்மைகள் எல்லாவற்றையும் கெடுப்பன, மான்று - மயக்க முடையதாய், இருள் தூங்கி - இருளாயிருந்து, முடிகின்ற - அழிகின்ற, முக் குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்.

(1)

2397. காமம் வெகுளி மயக்க மிவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே யுறைவதோர்
தாம மதனைத் தலைப்பட்ட வாறன்றே.

(ப. இ.) மேலோதிய குற்றங்கள் மூன்றும் இன்ன என ஓதுகின்றனர். காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களும் அருளால் கடிதல் வேண்டும். கடிதல் - நீக்குதல். கடிந்த நிலையில் ஏமமாகிய சிவபெருமானின் திருவடிப்பேற்றின்பம் வந்து கைகூடும். அவ்வின்பத்தைப் பெற்றுள்ள அடியேனுக்கு அடிக்கின்ற மணியகத்துத் தோன்றும் ஓசை போன்று 'ஓம்' என்னும் ஓசையினுள் விடாது தங்கியிருக்கும் தாமமாகிய சிவ ஒளி ஒன்று