961
 

6. பதிபசுபாசம் வேறன்மை

2366. அறிவறி வென்ற அறிவு மனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியிற் பிறப்பறுந் தானே.

(ப. இ.) ஆருயிரை அறிவென்றும், பேருயிரை அறிவுக்கு அறிவென்றும் கூறுப. ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா. இவ்விரண்டும் தொன்மையே உள்ளன. தொன்மை - அனாதி. அனாதி - ஆதியில்லாதது. அறிவு அறிவு என்ற அறிவாகிய ஆருயிரும் தொன்மையே. அறிவுக்கு அறிவாய் விளங்கும் இயற்கை அறிவாம் பதியும் தொன்மையே. அறிவினை விளங்கவொட்டாது தடை செய்து ஒட்டி நிற்கும் பாசமும் தொன்மையே. அறிவாகிய ஆருயிர்க்குப் பாச நீக்கத்தின் பொருட்டு அருளால் பிறப்பு உண்டாகும் அருளோனாகிய அறிவுக்கறிவு அவ்வறிவிற் பதியுங் காலத்துப் பிறப்பறும். தானே என்பதை எளிதாகப் பிறப்பறும் எனக் கூறுக. ஈற்றசை எனலும் ஒன்று.

(அ. சி.) அறிவு - ஆன்மா. அறிவு பதியில் - சிவத்துவம் உண்டாயின்.

(1)

2367. பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
பசுக்கள் தலைவனைப் பற்றி 1விடாவே.

(ப. இ.) பாசத்தால் கட்டுண்ட உயிரைப் பசு எனக் கூறுப. நீர் நிலைகளில் அந் நீரின் தூய்மையினையும் தெளிவையும் மறைத்து மேல் படர்ந்து நிற்கும் அழுக்கைப் பாசம் என்ப. இது போல் ஆருயிரின் அன்பு அறிவாற்றல்களை மறைத்து நிற்கும் ஆணவம் பாசம் எனப்படும். அப் பாசத்தால் மூடப்பட்ட வுயிர் பசு எனப்படும். அப் பசுக்கள் பிரமன் முதலாகச் சொல்லப்படும் எண்ணில்லாத பல கோடி உயிர்களாகும். அப் பசுக்களைக்கட்டிய பாசமும் மூன்றென்ப. அம்மூன்றும் ஆணவம் கன்மம் மாயை என்ப. சிவபெருமான் திருவருளால் பசுத்தன்மை நீங்கினால் அப் பாசமும் அறும். அறுக்கப்பட்ட ஆருயிராகிய பசுக்கள் பதியாகிய தலைவனைப்பற்றி விட்டுவிடா என்க.

(அ. சி.) பசு - ஆன்மா. பசக்கள் தலைவன் - சிவன்.

(2)

2368. கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறு நோக்கித்
தொடக்கொன்றும் இன்றித் தொழுமின் தொழுதாற்
குடக்குன்றி லிட்ட விளக்கது வாமே.


1. பற்றுக. திருக்குறள், 350.

" பாய்த்தியபின். 12. திருமூலர், 14.

" அனைத்துத். " சண்டேசர், 30.