மேலும் எல்லா இடங்களிலும் அவன் இடையறாதியற்றும் திருக்கூத்தை உகந்தருளினன். அத் திருக்கூத்தின் திருவாணைத் தொடர்பால் நெஞ்சத்தின் கண்ணெழுந்த உயிர்ப்பு கைகால் முதலிய பொறிகளைக் கலந்து இயக்குவதாயிற்று. (அ. சி.) அரதன மன்று - இரத்தினசபை (திருஆலங்காடு) குரவன் - குரு. அற்புதக் கூத்து 2716. குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் அருவுரு வாவதும் அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே. (ப. இ.) குருவின் திருவுருவையல்லாமல் இடையறாது நினைத்து இன்புறும் திருவுரு வேறொன்றுமின்று. குனித்தல் - இடையறாது நினைத்தல்; தியானித்தல். கட்புலனாகாத அருவவடிவமாவது அருமை வாய்ந்த அக்குருவேயாகும். திரிபுரை என்னும் திருவருள் திகழ்ந்து விளங்குவதும் அக்குருவடிவே. உருவமாயும், அருவமாயும் உற்று விளங்குபவள் உமையவளாவள். (அ. சி.) குனிக்கும் - நினைக்கும். (1) 2717. திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே உருவரு வாவது முற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே. (ப. இ.) சிவபெருமான் திருவடியினைச் சேர்ந்து இன்புறுதற்கு என்றும் வாய்ப்பான திருவழி நன்னெறி நான்மையாகும். அதுவே சிற்றம்பலத் திருக்கூத்தாகும். சிவகுருவடிவினை அகமுற இடையறாது எண்ணுவார்க்கு அவ்வுருவே சிற்றம்பலத்திற் குனிக்கும் திருவுருவென்பது தெள்ளத்தெளிய வுள்ளத்துப் புலனாம். சிவகுருவின் திருவுருவே அருவுருவாய் நடிக்கும் அம்பலவாணரின் அருளுருவாகும். இவ்வுண்மையினை அருளால் முற்றுமுணர்ந்தோர்க்குத் திருவருள் வழியாவதும் அத் திருச்சிற்றம்பல வழியேயாகும். (அ. சி.) திருவழி - நன்னெறி. உள்ளாக் குனிக்கும் - உள்ளத்தில் நினைக்கும். (2) 2718. நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந் தாடும் இடந்திரு அம்பலந் தானன்றே. (ப. இ.) சிரசின்கண் உச்சிக்குமேல் பன்னிரண்டு விரற்கிடைவரை உயிர்ப்பு எழுந்து ஓடும். ஆண்டு ஓங்கி எழுந்து தோன்றிடுமாறு நீரும்
|