(அ. சி.) தளிர்......அகத்து - பற்று அற்றவனது உள்ளத்தில் சுகம் உண்டாகும். விளிப்பதோர் சங்குண்டு - அது பத்துவித நாதங்களில் சங்கோசை கேட்கும்போது. வேந்தன் - ஆத்மா. குசவர் காவிதி; இரேசக பூரகம் பதம் ஒன்று - கும்பகம். (58) 2884. குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி யுள்ளலும் ஊரார் அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே. (ப. இ.) உள்ளங் கவிந்து கள்ளப் புலன்வழிச் செல்லும் பற்றுதலினின்றும் நீங்குதல் வேண்டும். அங்ஙனம் நீங்கிய எண்ணமாகிய சித்தத்தைக் கோவில் எருமை என்றனர். கோவில் எருமை: ஆருயிரின் நிலைக்களமாகிய எண்ண வளர்ச்சி. உயிர்ப்புப் பயிற்சிக்குத் தடையாகிய காம முதலிய அறுபகையும் படைபோல் வருவதைக் கண்டு பாதி வழியில் அவ்வெண்ணம் மீண்டது. அவ் வுயிர்க்கு நெருங்கிய உடையவனாகிய வலிய அமைச்சனாம் இறுப்புமெய் உண்மையை நினைக்கும் நினைக்கவே அவ்வுயிர் ஐந்தும் நான்கும் கூடிய தொகை ஒன்பது; இவை உடம்பகத்துள்ள ஒன்பது வாயில்களாகும். இத்தகைய உடம்பினுள் புகார் என்க. (அ. சி.) குடைவிட்டு - கவிந்துள்ள ஆசை நீங்கி. போந்தது - சிவத்திடம் சென்றது. கோவில் எழுமை - மனக்கோவிலில் உள்ள சித்தம் படைகண்டு - காமாதி சேனைகளைக் கண்டு. பாதி வழியில் - யோக அப்பியாசத்தின' நடுவில். மீண்டது - தப்பித்துக் கொண்டது. உடையவன் மந்திரி - புத்தி. உள்ளலும் - விசாரித்தால் ஊரார் - தேகியாராகிய சீவனார். அடையார் நெடுங் . . . . கே ஒன்பது வாயிலையுடைய தேகத்தில். புகார் - பிறவார். (59) 2885. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியு மாகுமே. (ப. இ.) புலன்களிற் செல்லும் நலமில் விருப்பமும், உள்ளே புகுந்து பற்றக்கூடிய உயிர்ப்பின் மாத்திரை அளவு எட்டும், ஆகிச் சமைந்தன கண் முதலாகிய ஒன்பது துளையுள்ள வாயில்கள். நிலையான எண் விரல் மூச்சும் நால்விரல் மூச்சும் முறையே நாகம் (2880) எனவும் புரவி எனவும் கூறப்பட்டன. இவற்றைச் செலுத்தும் ஆருயிரான பாகன் செலுத்தாது அடக்குதல் வேண்டும். அங்ஙனம் அடக்கினால் மெய்யுணர்வு வெற்றியுண்டாகும். பன்றி - வென்றி. (அ. சி.) போகின்ற வெட்டும் - இந்திரியங்களில் செல்லும் விருப்பமும். புகுகின்ற.........பத்தெட்டு - உள்ளே புகுகின்ற பற்றக்கூடிய எட்டு மாத்திரையான பிராணன். நாக.........புரவியும் - நிலையான எண்விரல் பிராணனோடு நால்விரல் பிராணனையும் பன்றி - வெற்றி. (60)
1. எண்ணுகேன். அப்பர், 9. 96 - 1.
|