உணர்க. சிவபெருமான் இயற்கை அருட்பெரும் சோதியாய்த் திகழ்கின்றான். சொல்லவும் கருதவும் ஒண்ணாத மேன்மைமிக்க அச்சோதியை இடையறாது எண்ணுதல் வேண்டும். அவ்வாறு நினையாது இடையிடையே நினைப்பது நன்றாகாது. அடியேன் அதனைத் தொடர்ந்து நினைந்து பின்பற்றுவேன். அளவிட முடியாததும் அழிவில்லதும் ஆகிய அத் திருவருட்சுடர்ப் பெருமையை அவனருள் துணையால் உணர்வின்கண் எட்டுவன். அத்தகைய உயிருடன் கலந்து உயிருக்குயிராய் நிற்கும் இறைவனும் அவனே. அவனைக் கூடிய அளவு பேரன்பினால் இடையறா நினைப்புடன் கலப்பதே திருமஞ்சனமாகிய வழிபாடாகும். மஞ்சனம் - திருமுழுக்கு. இச்சொல் இனம்பற்றி வழிபாட்டினையுங் குறிக்கும். (அ. சி.) மேதகு - பெருமையுள்ள. மட்டு - அன்பு. (10)
13. கல்வி 277. குறிப்பறிந் தேனுடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.1 (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கட்கு வினைக்கீடாக உடலினைப் படைத்து அளித்தனர். அதன்கண் அவ்வுயிரைக் கூட்டி உலகத்துக்கு வரச் செய்த குறிப்பினை அருளால் அறிந்தேன். அஃதாவது மாறா அன்பு செய்து அதன் ஆறாக அவன் திருவடியை அடைதல். அதன் பொருட்டுச் சிவபெருமானும் அவ்வுயிர்களுடன் பிரிப்பின்றிக் கலந்தியக்குகின்றான். அப் பேருண்மையினையும் அறிந்தேன். தேவர்கோவறியாத தேவ தேவனாய் மூவர் முதல்வனாய் யாவர்க்கும் இன்பனாய் விளங்கும் அவனை அடியேன் உள்ளத்துத் திருவைந்தெழுத்து எண்ணுமுறையால் அடைத்துள்ளேன். அவனும் மிக்க உவப்புடன் உள்ளம் புகுந்தருளினன். அவன் உள்ளத்தை விட்டுக் கள்ளம் பண்ணாது வெளிப்பட்டு நிற்கும் அருளினைப்புரிவிக்கும் திருவைந்தெழுத்தை நெஞ்சழுத்திப் பயின்றேன். இத்தகைய நன்னெறிக் கலையே மெய்யுணர்வுக் கல்வியாகும். அவனருளால் அக் கல்வியினை அடியேனும் கற்றுக்கொண்டேன். (அ. சி.) செறிப்பு - கலப்பு. மறிப்பு - மீட்சி. கறிப்பு - உள்ளிருக்கும் உணர்வு. (1) 278. கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு2 கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
1. கற்றதனால். திருக்குறள், 2. 2. தண்டியடிக. 12. தண்டியடிகள், 1.
|